20 Tuberculosis Diagnostic Microscopes worth Rs 5.40 Lakhs on behalf of MRF: Presented to Perambalur Collector!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு காசநோய் கண்டறிவதற்குப் பயன்படும் வகையில், எம்.ஆர்.எப். நிறுவனத்தின் சார்பில் தலா ரூ.27,000- வீதம் மொத்தம் ரூ.5.40 இலட்சம் மதிப்பிலான 20 நவீன மைக்ரோஸ்கோப் இயந்திரங்களை கலெக்டர் கற்பகத்திடம், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் எம்.ஆர்.எப் நிறுவனம் சார்பில், அதன் பொது மேலாளர் செரியன் சக்காரியா வழங்கினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என அறிவித்து அதற்கு தேவையான சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அனைத்து மாவட்டங்களிலும் காசநோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுநாள் வரை 650 நபர்களுக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டு, முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ,காசநோயை ஒழிப்பதற்காக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, எம்.ஆர்.எப் நிறுவனத்தினர் சமூக பொறுப்பு நிதியிலிருந்து, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காசநோய் கண்டறிவதற்காக எல்.இ.டி. விஷன் 2000 என்ற நவீன மைக்ரோஸ்கோப் இயந்திரங்களை 20 எண்ணிக்கையில் எம்.ஆர்.எப் நிறுவனம் வழங்கப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் நோயாளிகளை பரிசோதனை செய்வதன் மூலம் நோய் கண்டறியப்பட்டு அவர்களுக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை வழங்க உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
காசநோய் துணை இயக்குநர் நெடுஞ்செழியன், எம்.ஆர்.எப் நிறுவன பிரிவு 1 பொது மேலாளர் நாதன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.