2000 new buses: employment for around 750 people; Transport Minister Sivashankar information!


போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், தெற்கு மாதவி கிராமம் மருதையாற்றில் ரூ.30 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகளை கலெக்டர் கற்பகம் தலைமையில் தொடங்கி வைத்தார்.

மருதையாற்றின் கிளை ஓடை கீழக்கணவாய் கிராமத்தில் உருவாகி தம்பிரான்பட்டி, புதுநடுவலூர், செல்லியம்பாளையம், நொச்சியம், விளாமுத்தூர், நெடுவாசல், கல்பாடி, கொட்டரை, கூடலூர், புஜங்கராயநல்லூர், மாக்காய்குளம், வாரணாசி, கடம்பூர் வழியாக சுமார் 70.50‌ கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணித்து முட்டுவாஞ்சேரி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் சங்கமிக்கிறது.

தெற்கு மாதவி கிராமத்தில் மருதையாற்றின் கிளை ஓடையில் முட்புதர்கள் அடர்ந்தும் மண்மேடிட்டு தூர்ந்தும் உள்ளதால் நீர் வெளியேற்றும் திறன் குறைந்து காணப்படுகிறது. தற்பொழுது பெய்த வடகிழக்கு பருவ மழையினால் ஏற்பட்ட வெள்ள நீர் மருதையாறு முழுமையாக வெளியேற்றும் திறன் இல்லாததால் அருகில் உள்ள பாசன நிலங்களில் நீர் தேங்கி, விவசாய சாகுபடி பொருட்களுக்கும் மற்றும் நிலங்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை சரி செய்வதற்காக ரூ.30 லட்சம் செலவில் 0 மீ முதல் 1,500 மீட்டர் வரையிலும், 1500மீ முதல் 3,000 மீட்டர் வரை உள்ள வரத்து வாய்க்காலினை நீர் செல்லும் திறனை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் பணிக்காக வாய்க்கால் முழுவதையும் தூர்வாரி ஏரிக்கரையினை பலப்படுத்தி, ஏரிப் பகுதியிலுள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி, கொள்ளளவை அதிகரித்து நீர் கொண்டு செல்வதற்கும், நீர் தேக்கி வைக்கும் அளவிற்கும் தூர்வாரும் பணிகள் நடைபெறவுள்ளது. பக்க கரையை வலுப்படுத்துவதன் மூலம் நீர் வெளியேற்றும் திறன் அதிகரிக்கப்பட்டு பக்க நிலங்கள் சேதம் ஏற்படுவதை தடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

போக்குவரத்துத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

பேருந்து சேவைகள் எங்காவது நிறுத்தப்பட்டிருந்தது தெரிய வந்தால் கண்டிப்பாக அந்த சேவையினை தொடங்குவதற்கு விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரும் வகையில் பேருந்து சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா கால கட்டத்தில் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்து தங்களது படிப்பினை தொடரலாம் என்று அறிவித்ததை தொடர்ந்து, அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. மேலும் போக்குவரத்து பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 625 நபர்களுக்கும், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 125 நபர்களுக்கும், இதர போக்குவரத்து கழகத்திற்கு தேவைக்கேற்ப பணியாளர்களை நிரப்பவும் உத்தரவிட்டுளதை தொடர்ந்து இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

15 வருடங்கள் நிறைவடைந்த பேருந்துகளை இயக்க கூடாது என ஒன்றிய அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் புதிதாக 2,000 பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. 15 வருடங்கள் நிறைவடைந்த பேருந்துகளை உடனடியாக கழிவு செய்தால் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து வசதி தடைப்படும். எனவே புதிய பேருந்துகள் வாங்கி 06 மாத கால சோதனை ஓட்டம் நிறைவடைவதற்குள் 15 வருடங்கள் நிறைவடைந்த பேருந்துகள் படிப்படியாக கழிவு செய்யப்படும், என தெரிவித்தார்.

பின்னர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2,70,000 மதிப்பீட்டில் 11 பயனாளிகளுக்கும், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.11,69,000 மதிப்பீட்டில் 14‌ பயனாளிகளுக்கும், தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.4,07,400 மதிப்பீட்டில் 30 பயனாளிகளுக்கும், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.2,74,800 மதிப்பீட்டில் 40 பயனாளிகளுக்கும், திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.4,00,000 மதிப்பீட்டில் 8 பயனாளிகளுக்கும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.6,33,000 மதிப்பீட்டில் 06 பயனாளிகளுக்கும், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.5,30,000 மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கும் என மொத்தம் ரூ.36,84,200 மதிப்பீட்டில் 114 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் தலைமையில் வழங்கினர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சி.ராஜேந்திரன், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, ஆலத்தூர் வட்டாட்சியர் முத்துகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!