3 forces in PMK: President GK Mani announces

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி விடுத்துள்ள அறிவிப்பு:

தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும் நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக அதன் நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டங்களை குறித்த காலத்தில் செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவும், நினைவூட்டவும் விரும்புகிறேன்.

கடந்த ஜனவரி 5-ஆம் தேதி நடைபெற்ற பா.ம.க. மற்றும் துணை அமைப்புகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு பணிகளை மருத்துவர் அய்யா அவர்கள் நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளார். மருத்துவர் அய்யா அவர்கள் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உறுதிமொழியின்படி, கட்சி வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை அனைத்து நிலை நிர்வாகிகளும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளும், செயல்திட்டங்களும் அடித்தட்டு மக்களை சென்றடையவும், கட்சி உயிரோட்டமாகவும் இருப்பதற்கு காரணம் கிளைகள் தான் காரணம் ஆகும். கிளை அளவில் கட்சியை மேலும் வலுப்படுத்தவும், கொடுக்கப்பட்ட பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்யவும் வசதியாக மாதந்தோறும் முழுநிலவு நாளன்று கிளைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை தவறாமல் பின்பற்றி மாதந்தோறும் கிளைக்கூட்டங்களை பா.ம.க. நிர்வாகிகள் நடத்த வேண்டும்.

அதேபோல், கட்சியின் வளர்ச்சிக்கு காரணமாக விளங்கும் ஒன்றிய, நகர, பேரூர் அளவிலான கட்சிக் கூட்டங்களும் குறிப்பிட்ட தேதிகளில் நடத்தப்பட வேண்டும்; மாவட்ட அளவிலான பொதுக்குழுக் கூட்டங்களும் குறிப்பிட்ட இடைவெளியில் நடத்தப்பட வேண்டும். இந்தக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த காலத்தில் செயல்படுத்தப்படுவதை மாவட்ட நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அறிவிக்கப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி மக்கள் படை ஆகிய முப்படைகளும் விரைந்து உருவாக்கப்பட வேண்டும். தம்பிகள் படை மற்றும் தங்கைகள் படை கூட்டங்களை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை அழைத்து நடத்த வேண்டும்.

27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், மாநிலம் முழுமைக்குமான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளையும் பா.ம.க. நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமின்றி வன்னியர் சங்கம் மற்றும் துணை அமைப்புகளான இளைஞர் சங்கம், மாணவர் சங்கம், மகளிர் சங்கம், இளம்பெண்கள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளும் தங்கள் அமைப்புகள் மற்றும் கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

பா.ம.க. மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் தங்களுக்கு வழங்கப்படும் பணிகளை நாட்குறிப்பில் (டைரி) பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்தப் பணிகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் அந்த நாட்குறிப்பில் பதிவு செய்ய வேண்டும். கட்சித் தலைமையால் வழங்கப்படும் பணிகளை அனைத்தையும் குறிப்பிட்ட காலத்தில் முடித்து அதுபற்றி தலைமைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகளை மிகவும் மரியாதையுடன் நடத்த வேண்டும். கூட்டங்கள் மற்றும் விழாக்களுக்கு அழைத்த வேண்டும். அவர்கள் வழங்கும் ஆலோசனைகளை கேட்டு நடக்க வேண்டும். இளைஞர் சங்கம், மாணவர் சங்கம், மகளிர் சங்கம், இளம்பெண்கள் சங்கம் ஆகியவற்றுக்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்க்கவும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!