3 new projects worth Rs 1.59 crore in Rasipuram assembly constituency : Ministers Participation
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழாவும், புதிய சாலை மேம்பாட்டுப்பணிகள் தொடக்க விழாவும் இன்று நடைபெற்றது. இவ்விழாக்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்தார்.
நாமக்கல் மாவட்டம், பிள்ளாநல்லூர் பேரூராட்சி பாவடி பகுதியில் ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.96 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கான பணியினையும்,
அத்தனூர் பேரூராட்சியில் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.ஒரு கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியினையும், வெண்ணந்தூர் பேரூராட்சியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் வடிக்காலுடன் கூடிய தார்சாலை அமைக்கும் பணியினையும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி,மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், ஓ.சௌதாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.11.80 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் இரண்டு புதிய வகுப்பறை கட்டடத்தினையும், மதியம்பட்டி ஊராட்சி, பொரசல்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு ரூ.11.80 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் இரண்டு புதிய வகுப்பறை கட்டடத்தினையும், மின்னக்கல் ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தினையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
முன்னதாக வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் ஓ.சௌதாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு சிறப்பு நாற்காலியினை அமைச்சர்கள் வழங்கினர். பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.