பெரம்பலூர்: பெரம்பலூரில் தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா காணொலி மூலம் திறந்து வைத்த அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று எழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்கிடும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், பல்லவபுரம் நகராட்சி, ஜி.எஸ்.டி. சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள “அம்மா உணவகத்தை” காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். மேலும், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 201 அம்மா உணவகங்களையும் திறந்து வைத்தார்.
அதனுடன் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் மொத்தம் 2 அம்மா உணவகங்களையும் அம்மா உணவகங்களும் அடங்கும்.
அம்மா உணவகங்களில் காலை 7.00 மணி முதல் 10 மணி வரை இட்லி சாம்பாரும், மதியம் 12.00 மணி முதல் 3.00 மணி வரை சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதமும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் பணியமர்த்தப்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
இட்லி ஒன்று 1 ரூபாய் வீதமும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும் மற்றும் தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரும் பயனளிக்கும் அம்மா உணவகங்களின் சேவை மேலும் விhpவுபடுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன், நகராட்சித்தலைவர் இரமேஷ், நகராட்சித் துணைத் தலைவர் ஆர்.டி.இராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் நா.சேகர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் து.ஜெயக்குமார், ந.கிருஷ்ணகுமார், ரா.வெண்ணிலா ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் பெரம்பலூர் கூட்டுறவு விற்பனை பண்டகசாலை தலைவர் ராஜேஸ்வரி, நகராட்சி ஆணையர் முரளிதரன், இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.வே.உதயகுமார், உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்