38 candidates filed in first day of local body elections in Perambalur district

பெரம்பலூர் மாவட்டத்தில் 1,237 பதவியிடங்களுக்கு உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்கியது. முதல்நாளில் 38 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக வரும் 27ம்தேதி பெரம்பலூர், வேப்பூர் ஒன்றியங்களில் 4 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்கள், 37 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்கள், 53 ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடங்கள் மற்றும் 462 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இரண்டாம் கட்டமாக வரும் 30ம்தேதி வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் ஒன்றியங்களுக்குட்பட்ட 4 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்கள், 39 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்கள், 68 ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடங்கள் மற்றும் 570 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவிகளுக்கும், அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் என காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு திங்களன்று வேட்பு மனு தாக்கல் துவங்கியது. இதற்காக அலுவலகங்களில் தேர்தல் அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனு தாக்கலின் போது டெப்பாசிட் தொகையாக மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ரூ. ஆயிரமும், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ரூ. 600, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ. 200ம் செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி இனத்தவர்கள் டெப்பாசிட் தொகையில் 50 செலுத்தினால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலில் போட்டியிடுவோரிடமிருந்து வேட்பு மனு தாக்கல் துவங்கியதில் பெரம்பலூர் ஒன்றியத்தில் 8 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 9 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 2 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், வேப்பூர் ஒன்றியத்தில் 17 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் என மொத்தம் 36 பேர் வேட்பு மனு செய்துள்ளனர்.

இதே போல் ஆலத்தூர் ஒன்றியம், புஜயங்கராய நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 2 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 38 பேர் தேர்தலில் போட்டியிட வேட்பு தாக்கல் செய்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!