பெரம்பலூர்: குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான கோரிக்கையை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கூட்டம் பெரம்பலூரில் மாவட்ட தலைவர் மீனா தலைமையில் நேற்று நடைபெற்றது.
பொருளாளர் பாக்கியம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் எ.கலையரசி பாதிக்கப்பட்டோரை அறிமுகப்படுத்தி பேசினார்.
மாவட்டத் துணை செயலாளர் பி.பத்மாவதி தீர்மானம் வாசித்தார். மாநில செயற்குழு எஸ்.கீதா, தீண்டாமை ஒழிப்பு முன்னனி ஆலோசகர் வழக்கறிஞர் இரா.ஸ்டாலின், மருத்துவர் சங்கம் வஸந்தா, ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி பேசியதாவது: தமிழகத்தில் மதுபான கடைகளின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும்,
21 வயதுக்குட்பட்டவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது, வாரத்தில் 2 நாட்கள் மது விற்பனையை நிறுத்த வேண்டும், இலக்கு வைத்து விற்பணை செய்யக்கூடாது,
அதிகளவில் மக்கள் போதையில் முடங்கியதால் அரசாங்கத்தின் தில்லு முல்லுகளை தட்டிக்கேட்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கையில்; அரசாங்கம் செயல்படுவதாகவும்,
டாஸ்மாக் கடைக்கு முக்கியத்துவம் கொடுத்து கடையின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வரும் அரசு போதை மறுவாழ்வு மையங்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை.
இன்றைய சமுதாயத்தில் மது அருந்தினால் தான் கௌரவம் என்ற மாயை பரப்பும் சினிமா நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
மாநாட்டில் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் அரியலூர், தா.பழூர் பகுதியை சேர்ந்த மாதர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் ஏவால்மேரி நன்றி தெரிவித்தார்.