4,37,250 people tested for “Makkalai Thedi Maruthuva Thittam” : Perambalur Collector Information!

பெரம்பலூர் மாவட்டத்தில் “மக்களை தேடி மருத்துவம்” என்ற மகத்தான திட்டத்தின் கீழ் இதுவரை 4,37,250 நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் கற்பகம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொளக்காநத்தம், சில்லகுடி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது தெரிவித்ததார்.

தமிழ்நாடு முதலமைச்சர், அனைவருக்கும் நல் வாழ்வு என்ற உயிரிய சிந்தனையில், பாமர மக்களுக்கும் தரமான மருத்துவம் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை 05.08.2021 அன்று தொடங்கி வைத்தார்.

இதில் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரக பிரச்சனை, பிசியோதெரபி சிகிச்சை, புற்றுநோய் பாதிப்பு உள்ளிட்ட தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்கள் மருத்துவமனைகளுக்கு தேடி வரக்கூடிய நிலையினை மாற்றி மருத்துவ பணியாளர்கள் அவர்களை தேடிச் சென்று அவர்களுக்கு தேவையான பரிசோதனைகளைச் செய்து மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ சேவை வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 5,95,790 நபர்களில் 18 வயது பூர்த்தியடைந்த 4,52,329 நபர்களில் (01.02.2023) வரை 4,37,250 நபர்களுக்கு அதாவது 97% நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்களை தேடி மருத்துவச்சேவை மூலம் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட 11,485 நபர்களுக்கும், இரத்த கொதிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட 17,589 நபர்களுக்கும், சர்க்கரை மற்றும் இரத்த கொதிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட 7,206 நபர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை அவர்களது வீடுகளுக்கு சென்று பரிசோதித்து வழங்கி வருகிறார்கள்.

அதேபோல 1,780 நபர்களுக்கு தேவையான பிசியோதெரபி சிகிச்சையினை அவர்களது வீடுகளுக்கு சென்று வழங்கி வருகிறார்கள். மேலும் நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட 1,901 நோயாளிகளுக்கும், வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 19 நோயாளிகளுக்கும், மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 43 நோயாளிகளுக்கும் தேவையான தொடர் மருத்துவ கண்காணிப்பு மற்றும் தொடர் மருத்து தேவைகள் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது, என அவர் தெரிவித்தார்.

சுகாதார பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் மகாலட்சுமி, மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் விவேகானந்தன், மாவட்ட தாய், சேய் நல அலுவலர் சந்தியா, மாவட்ட தொற்றா நோய் அலுவலர் ஷீனா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!