45 persons including 2 women kidnapped young woman married to a 10-year prison sentence

நாமக்கல் அருகே இளம்பெண்ணை கடத்திச்சென்று திருமணம் செய்த வழக்கில் 2 பெண்கள் உட்பட 5 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திகுளம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் காளப்பநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந்தேதி பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தாயார் சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து 7-வது வார்டு காமராஜபுரத்தை சேர்ந்த மோகன்தாஸ் (23) என்பவர் மாணவியை திருமண ஆசைக்காட்டி கடத்தி சென்று இளம்வயது திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

மேலும் இந்த கடத்தல் சம்பவம் மற்றும் இளம்வயது திருமணத்திற்கு மோகன்தாசின் தந்தை ராஜேந்திரன் (50), தாயார் செல்வி (42) மற்றும் உறவினர்கள் கர்ணன் (45), சித்ரா என்கிற மேரி (24) ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மோகன்தாஸ் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 5 பேர் மீதும் நாமக்கல் மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட மோகன்தாஸ், ராஜேந்திரன், செல்வி, கர்ணன் மற்றும் சித்ரா ஆகிய 5 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி இளங்கோ உத்தரவிட்டார்.

இதேபோல் சித்ராவுக்கு ரூ.3 ஆயிரமும், மற்ற 4 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!