5 pound gold jewelery, 60 thousand cash, scooter theft in Perambalur by Mystery persons
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் அருகே உள்ள அனைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முரளி(30) – மகேஸ்வரி(26), தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளது. முரளி பெரம்பலூரில் உள்ள ஒரு பிரபல இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருவதால், கடந்த இரு ஆண்டுகளாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம், வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 25 நாட்களுக்கு முன்னர் முரளியின் மனைவி மகேஷ்வரி 2வது பிரசவத்திற்காக அணைப்பாடி கிராமத்திற்கு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.முரளி கடந்த 9ம்தேதி, வீட்டை பூட்டி விட்டு, திமுக தேர்தல் பணியில் ஈடுபட்டதால் ஓய்வெடுக்க ஊட்டிக்கு சென்று விட்டார்.
நேற்று இரவு முரளியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகை, 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், 1 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டர் திருடு போனது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த, அவர்கள், பின்னர், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயை வரவழைத்து, தடயங்களை கைப்பற்றி, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேற்று, பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில், உள்ள ரோஜா நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருடு போன நிலையில், இன்று நகை, பணம், இருசக்கர வாகனம் என அடுத்தடுத்து நிகழும் திருட்டு சம்பவத்தால், பெரம்பலூர் வாழ் பொது மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.