பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மளிகை கடை, ஷாப்பிங் மால், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மேகி நூடுல்ஸ் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து திடீர் ஆய்வு நடத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சின்னமுத்து, ரவி, அழகுவேல், அன்பழகன் ஆகியோரை கொண்டு உணவு பாதுகாப்பு துறையினர் பெரம்பலூர் நகரில் உள்ள மளிகை கடை, ஷாப்பிங் மால், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.
ஆய்வின்போது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மேகி நூடுல்ஸ், வாய் வாய் எக்ஸ்பிரஸ் நூடுல்ஸ், ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், ஸ்மித் அண்ட் ஜோன்ஸ் சிக்கன் மசாலா நுõடுல்ஸ் உட்பட ஆறு வகையான நூடுல்ஸ் வகைகளை விற்பனைக்கு தடை செய்தனர்.
இது குறித்து பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் தமிழக அரசு தடை செய்துள்ள ஆறு நூடுல்ஸ் வகைகளை விற்பனை செய்யக்கூடாது என கடை உரிமையாளர்கள், டீலர்கள் ஆகியோரிடம் கண்டிப்புடன் தெரிவித்து இப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு தெரிவித்துள்ளோம் என்றார்.