பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான நந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரண்டு சட்ட மன்றத் தொகுதிகள் உள்ளன.
நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலை செம்மைபடுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் இறப்பு, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஒருவரின் பெயர் இடம்பெற்றிருப்பது உள்ளிட்ட காரணங்களால் இதுவரை 6,243 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
20.01.16 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமென்று 5,606 மனுக்களும்,
திருத்தம் கோரி 2,463 மனுக்களும், ஒரே தொகுதியில் இடம் மாறுதல் கோரி 481 மனுக்களும் வரப்பெற்றுள்ளன.
இந்த மனுக்களின் மீது விசாரணை நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.
அதனடிப்படையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்காளர்களாக தங்கள் பெயர்களைப் பதிவு செய்யவும், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிந்துகொள்ளவும் பொதுமக்களுக்கு பல்வேவறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளது.
18 வயது பூர்த்தியடைந்த, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
18 வயது நிரம்பிய அனைவரும் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பாக என்ற www.elections.tn.gov.in முகவரியில் விண்ணப்பிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதில் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லாதவர்கள் பெயர்களை சேர்க்க படிவம் 6யும்,
பெயர் நீக்கம் செய்ய படிவம் 7யும், பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8யும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.