7 people arrested in lorry stealing mob Seized two trucks: Namakkal Police Searching 2 persons!
லாரி திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பலை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லிபாளையம் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீஸார், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் சமீபத்தில் வாங்கிய லாரியை சீரமைப்பு பணிகளுக்காக, நாமக்கல் அருகே காதப்பள்ளியில் உள்ள லாரிப்பட்டறைக்கு கடந்த நவம்பர் 30-ம் தேதி கொண்டு வந்துள்ளார். அப்போது லாரியில் இருந்த சில மாற்றங்களை சந்தேகடைமந்த பட்டறை பணியாளர்கள் இது தொடர்பாக நல்லிபாளையம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கண்ணனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், லாரியை விற்பனை செய்த நபர்கள் யார் என்பது தொடர்பாகவும் கண்ணனிடம் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போலீஸ் விசாரணையில், சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 51). இவர் தனது கூட்டாளிகளான சேலத்தைச் சேர்ந்த செல்வக்குமார் (49), தர்மபுரி மாவட்டம் ஊந்தங்கரைச் சேர்ந்த சாமிதுரை (33). போச்சம்பள்ளியைச் சேர்ந்த விஸ்வநாதன் (27), சேலம் மாவட்டம் பூலாம்பட்டியைச் சேர்ந்த சம்பத்குமார் (39), எடப்பாடியைச் சேர்ந்த வெள்ளியங்கிரி (49) மற்றும் மேட்டூரைச் சேர்ந்த குணசேகரன் (36), கார்த்திக் (36) ஆகியோர்கள் திருடி வரும் லாரியை விற்பனை செய்வது அல்லது அதன் மீது தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுக் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
மேலும், கிடைக்கும் தொகையை கூட்டாளிகளுக்கு பிரித்து வழங்கியும் வந்துள்ளார் என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவந்தது. இதையடுத்து லாரி திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், லாரி திருட்டில் ஈடுபட்ட செல்வக்குமார், சாமிதுரை, விஸ்வநாதன், சம்பத்குமார், வெள்ளியங்கிரி, குணசேகரன், கார்த்திக் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
கைதானவர்கள் கொடுத்த தகவலின்படி 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீஸார், இத்திருட்டு வழக்கில் தலைமறைவாக உள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சரேஷ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அக்குபாய் ஆகிய இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும்,லாரி திருட்டுக்கு மூளையாக செயல்பட்டு வரும் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த மாணிக்கம் ஏற்கனவே பெருந்துறையில் நடந்த திருட்டு வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட இரு லாரிகளும் நாமக்கல் வள்ளிபுரம் அருகே திருடப்பட்டது என, போலீஸார் தெரிவித்தனர்.