73.42 acres of barren land converted into crop fields in Perambalur district: Collector information!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொளக்காநத்தம், காரை, சில்லக்குடி, மேத்தால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளது, அதன் மூலம் விவசாயிகள் எந்த அளவு பயனடைந்துள்ளனர் என்பது குறித்து, கலெக்டர் கற்பகம் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொளக்காநத்தம் கிராமத்தில் ரூ.38 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தின் கட்டடப்பணிகளை ஆய்வு செய்த அவர் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பின்னர், சில்லக்குடி கிராமத்தில் தோட்டக்கலைத்துறையின் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஒரு ஹெக்டருக்கு 50% அரசு மானிய உதவியுடன் மூங்கில் பந்தல் அமைக்கும் திட்டத்தின் கீழ், விவசாயி தேவேந்திரன் என்பவர் தக்காளி பயிரிட்டுள்ளதை பார்வையிட்டார். அப்போது, அரசின் திட்டத்தால் மானிய உதவியுடன் தக்காளி பயிர்செய்து நல்ல வருமானம் ஈட்டி வருவதாக விவசாயி தெரிவித்தார். பின்னர் சில்லக்குடியில், தரிசு நிலத்தை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செப்பனிட்டு வேளாண்மைக்கு உகந்த விளைநிலமாக மாற்றும் பணியினையும் பார்வையிட்டார்.
பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் 2022-23ஆம் நிதிஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 30 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.22.26 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆலத்தூர் ஒன்றியத்தில் பாடாலூர், சிறுவயலூர், சில்லக்குடி, வரகுபாடி, பிலிமிசை, கொட்டரை, குரும்பபாளையம், புஜங்கராயநல்லூர், மாவிலங்கை மற்றும் ஜமீன்பேரையூர் போன்ற 10 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் பல்வேறு பணிகளின் முக்கியமானது தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றும் பணியாகும். அதனடிப்படையில், ஆலத்தூர் வட்டாரத்தில் 2021-22ஆம் ஆண்டில் 2 தரிசு நிலத் தொகுப்புகள் 38.27 ஏக்கர் பரப்பளவில் கண்டறியப்பட்டு இதுவரை 10 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல் 2022-23ஆம் ஆண்டிற்கு 2 தரிசு நிலத் தொகுப்புகள் 31.19 ஏக்கர் பரப்பளவில் கண்டறியப்பட்டு இதுவரை 10.5 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலங்களில் வரகு மற்றும் உளுந்து போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் பெரம்பலுார் மாவட்டத்தில் இதுவரை 73.42 ஏக்கர் தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தில் சில்லக்குடி ஊராட்சியில் 15.69 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது. ஆழ்துளை கிணறு, வரப்பு, நீர் செல்வதற்கான பாதை போன்ற அடிப்படை வசதிகள் அமைத்து, இந்த இடத்தை சீர்படுத்தி விவாசம் செய்வதற்கு உகந்த நிலமாக மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.27.56 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ஆலத்தூர் வட்டாரத்திற்கு ரூ.8.39 இலட்சம் மதிப்பீட்டில் ஜிங்க் சல்பேட், ஜிப்சம், தார்பாய்கள் மற்றும் வேளாண் உபகரணத் தொகுப்புகள் ஆகியவை இயற்கை வேளாண்மை ஊக்குவித்தல் மற்றும் வேளாண் தொழில் முனைவோராக்குதல் உள்ளிட்ட இனங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது, தெரிவித்தார்.
வேளாண்மை துணை இயக்குநர் .அ.கீதா, தோட்டக்கலை துணை இயக்குநர் மா.இந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பொ.ராணி, வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) செ.பாபு, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் கி.யுவராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.