74th Indian Independence Day: Perambalur Collector V. Chanda hoisted the national flag and paid his respects
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 74வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு, கலெக்டர் வே.சாந்தா இன்று காலை தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
கொரோனா வைரஸ் (கோவிட் 19) நோய் தடுப்பு பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 83 அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
சுதந்திர தின விழா கொண்டாடுதல் குறித்து அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் கிருமிநாசினி மற்றும் முக கவசம் அணிந்துள்ளதை உறுதி செய்யப்பட்டது.
தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு, சுதந்திர போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் நேரடியாக விழாவில் கலந்துகொள்வதினால் ஏற்படும் பாதிப்பினை கருத்திற்கொண்டு, இவ்விழாவினை நேரடியாக கலந்துகொள்வதை தவிh;த்திட அரசு அறிவுறுத்தியுள்ள நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவப்படுத்தும் விதமாக வட்டாட்சியர் நிலை மற்றும் வட்டார வளர்ச்சி நிலையிலான அலுவலர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளின் இல்லங்களுக்கே நேரடியாக சென்று பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து பொன்னாடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பாதுகாப்பு பணியில் முன் கள பணியாளர்களாக சிறப்பாக செயல்பட்ட காவல் துறையைச் சேர்ந்த 3 நபர்களுக்கும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையை சேர்ந்த 10 நபர்களுக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையைச் சேர்ந்த 31 நபர்களுக்கும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறையைச் சேர்ந்த 3 நபர்களுக்கும், வருவாய்த்துறையைச் சேர்ந்த 6 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறையைச் சேர்ந்த 4 நபர்களுக்கும் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையை சேர்ந்த 5 நபர்களுக்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தை சேர்ந்த 4 நபர்களுக்கும், கால்நடை பராமரிப்புத் துறையை சேர்ந்த 7 நபர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையை சார்ந்த 4 நபர்களுக்கும், 20 ஆண்டுகளாக விபத்தில்லாமல் வாகனம் ஓட்டிய 6 ஓட்டுநர்களுக்கு பதக்கம் என ஆக மொத்தம் 83 நபர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட சுதந்திர போராட்ட தியாகிகள் வரகுபாடி ரெங்கசாமி இல்லத்திற்கே நேரடியாக சென்று பொன்னாடை மற்றும் சந்தன மாலை அணிவித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியையும் வணக்கத்தினையும் கலெக்டர் வே.சாந்தா தெரிவித்துக் கொண்டார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செ. ராஜேந்திரன், உள்ளிட்ட பல பணியாளர்கள் கலந்து கொண்டனர்.