82 pregnant women have been vaccinated against corona: Deputy Director of Health Gitarani

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் உள்ளிட்ட கர்ப்பிணி பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பொது மக்களின் சந்தேகங்கள் மற்றும் தடுப்பூசி குறித்த ஐயப்பாடு குறித்தும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் (பொ) கீதாராணி விளக்கிப் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது.,

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் வட்டார தலைமை மருத்துவமனைகள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இது மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் நாள்தோறும் 25க்கும் மேற்ப்பட்ட சிறப்பு தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

எனவே பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் எவ்வித தயக்கமுமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முகக்கவசம் அறிந்து கொள்வதோடு, சமூக இடைவெளியையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று, சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பூசி குறித்த சந்தேகங்களை 104 மற்றும் 1077 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 92 ஆயிரத்து 537 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள 5,070 கர்ப்பிணிப் பெண்களில் 82% சதவீதம் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் மீதமுள்ள 18% சதவீத கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி போடும் பணி முடிவடைய உள்ளதாகவும், நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக பெரம்பலூரை மாற்ற முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின்படி சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் கீதாராணி தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!