A declining gender ratio, female promotional programs to enable children! PMK, Ramadoss
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் வேகமாக குறைந்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன. அனைத்துத் துறைகளிலும் உலக நாடுகளுக்கு சவால் விடுக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டதாக நாம் பெருமிதப்பட்டு வரும் நிலையில், பெண் குழந்தைகளை சுமையாக கருதும் வழக்கம் ஒழியாதது வெட்கப்பட வேண்டியதாகும்.
நாடு முழுவதும் குடிமைப் பதிவு அமைப்பு முறையில், பதிவு செய்யப்பட்ட பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறித்த விவரங்களை தலைமைப் பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் 10.16% குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 1000 ஆண் குழந்தைகளுக்கு இணையான பெண் குழந்தைகள் விகிதம் 935 ஆக இருந்தது. 2016-ஆம் ஆண்டில் இந்த விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 840 பெண் குழந்தைகள் என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கேரளத்தைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.
2010-ஆம் ஆண்டு வரை பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தில் தென் மாநிலங்கள் தான் முன்னணியில் இருந்தன. 2007-ஆம் ஆண்டில் தேசிய சராசரி பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 903 ஆக இருந்த போது, தமிழகத்தின் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 935 ஆக இருந்தது. 2010-ஆம் ஆண்டில் தேசிய சராசரி 857 ஆக குறைந்த நிலையில், தமிழகத்தின் விகிதம் 935 என்ற அளவிலேயே நீடித்தது. ஆனால், 2016-ஆம் ஆண்டில் தேசிய சராசரி 877 ஆக அதிகரித்த நிலையில், தமிழகத்தின் விகிதம் 840 ஆக குறைந்து விட்டது. 2015-ஆம் ஆண்டில் 818 ஆக குறைந்த பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் 2016-ஆம் ஆண்டில் 840 ஆக உயர்ந்தது என்பதைத் தவிர தமிழகம் திருப்தியடைய எதுவுமில்லை.
தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததற்கு அடிப்படைக் காரணம் கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? என்பதைக் கண்டுபிடிப்பதற்கு அதிநவீன கருவிகள் வந்து விட்டது தான் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கருவிலிருக்கும் குழந்தைகளின் பாலினத்தைக் கண்டுபிடித்து தெரிவிப்பது தடை செய்யப்பட்ட, தண்டனைக்குரியக் குற்றம் என்றாலும் கூட, பல்வேறு பகுதிகளில் குழந்தைகளின் பாலினம் கண்டுபிடிக்கப்படுவதும், பெண் குழந்தைகளாக இருந்தால் கருவிலேயே அழிக்கப்படுவதும் தொடர்கிறது என்பது தான் வேதனை அளிக்கும் உண்மை ஆகும்.
அதுமட்டுமின்றி, செயற்கை முறை கருத்தரிப்பின் போது ஆண் குழந்தைகளை உருவாக்கச் செய்தல், ரத்தம் மூலமான மரபணு ஆய்வின் மூலம் குழந்தைகளின் பாலினத்தைக் கண்டறிதல் ஆகியவையும் நவீன மருத்துவத் தொழில்நுட்பத்தின் மூலம் இப்போது சாத்தியமாகியுள்ளன. இவை சட்டப்படி தடை செய்யப்படவில்லை என்பதால் இவையும் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவதற்கு காரணமாகின்றன.
இவை அனைத்தும் பெண் குழந்தைகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் தான். இவை அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. அதேநேரத்தில் பெண் குழந்தைகள் எதிர்காலச் சுமைகள் என்ற எண்ணத்தை மக்களின், குறிப்பாக கிராமப்புற மக்களின் மனங்களில் இருந்து அகற்றுவது தான் இப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாக அமையும். இக்காலப் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதனைகளைப் படைப்பதுடன், பெற்றோருக்கு பெருந்துணையாகவும் உள்ளனர் என்பது உண்மை. எனினும், கிராமப்புறங்களில் வாழும் ஏழை மக்களிடையே பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவை செலவு பிடிக்கும் விஷயங்களாக இருப்பதும், பெண்களை வளர்த்தெடுக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தான் பெண் குழந்தைகளை சுமையாக நினைக்க வைக்கின்றன.
இந்த எண்ணத்தை மாற்றவும், பெண் குழந்தைகள் சாபமல்ல… வரம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தவும் விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பெண் குழந்தைகளைக் காக்கும் நோக்கத்துடன் தொட்டில் குழந்தைகள் திட்டம், குழந்தைகளின் பெயரில் வைப்புத்தொகை செலுத்தும் திட்டம், கல்விக் கட்டண சலுகை உள்ளிட்ட பல திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும், அவை போதியத் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், பெண் குழந்தைகளுக்கு மழலையர் வகுப்பு முதல் முனைவர் பட்ட ஆய்வு வரை அனைத்து நிலைகளிலும் கல்வி இலவசம் என்பது உள்ளிட்ட புதிய ஊக்குவிப்புத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்.