A gang of 5 people attacked and killed a real estate businessman in Perambalur with a beer bottle!

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் கணபதி மகன் பன்னீர் செல்வம்(52). பிரபல ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான இவர், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பள்ளிவாசல் பின்புறம் ஸ்ரீசாய்ராம் புரோமோட்டர்ஸ் என்ற பெயரில் அலுவலகம் வைத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், பெரம்பலூர் கடைவீதி பகுதியில், துறையூர் புத்தனாம்பட்டி கிராமத்தை சேர்ந்த மகேஷ்வரி என்பவருக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய
நான்கரை சென்ட் நிலத்தை, பெரம்பலூரைச் சேர்ந்த சிதம்பரம் பேங்கர்ஸ், உரிமையாளரான சிதம்பரம் நமச்சிவாயம், என்பவருக்கு, பன்னீர்செல்வம் கடந்த 2 வருடத்திற்கு முன்னர் விலைக்கு வாங்கி கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தில் பன்னீர்செல்வம் மூலம், கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், பெரம்பலூர் மற்றும் துறையூரில் உள்ள ரேணுகா சில்க்ஸ் உரிமையாளரான துறையூர் அருகே உள்ள புத்தனாம்பட்டி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் (மகேஷ்வரியின் சகோதரர்) அந்த கட்டிடத்தை வாடகைக்கு கேட்டதாக தெரிகிறது. கட்டிட உரிமையாளரான சிதம்பரம், சம்பந்தப்பட்ட கட்டிடத்தை கிருஷ்ணமூர்த்திக்கு வாடகை தர மறுத்து வந்த நிலையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகத்தை ஒட்டி வடக்கு நோக்கி செல்லும் வெங்கடாஜலபதி நகர் சாலையில் நேற்று இரவு நிறுத்தப்பட்டிருந்த தனது காரை எடுப்பதற்காக சென்ற பன்னீர்செல்வத்தை அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டது.

இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்து இரத்த வெள்ளத்தில் அலறிய பன்னீர்செல்வத்தின் சத்தம் கேட்டு, பொது மக்கள் திரண்டதால், தாக்குதல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானது. இதனைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலின் பேரில், எஸ்பி.,மணி தலைமையில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே சம்பந்தப்பட்ட கட்டிடத்தை சிதம்பரம் நமச்சிவாயம், வாடகைக்கு தராதற்கு, சாய்ராம் புரோ மோட்டார்ஸ் உரிமையாளர் பன்னீர்செல்வம் தான் காரணம் என ரேணுகா சில்க்ஸ் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, மேலாளர் செந்தில்கிருபா, மாவிலங்கை ஊராட்சி மன்ற தலைவர் ராஜராஜன், பி.ஆனந்த் ஆகியோர் மேற்பார்வையிலும், தூண்டுதலின் பேரிலும் அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல், தன் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பன்னீர்செல்வம் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார். பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் பரபரப்பான சாலையில், நிகழ்ந்த இந்த திடீர் கொலை முயற்சி சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!