A reduction in private milk procurement prices again; Sleeping opposition parties; Milk producers worry!!
தனியாருக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்ய அரசு சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும், அதற்கு எதிர்க்கட்சிகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது!
பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலையை கடந்த மே மாதம் இறுதியில் லிட்டருக்கு 10 ரூபாய் வரை அதிரடியாக குறைத்த தனியார் பால் நிறுவனங்கள் கடந்த வாரம் பால் பாக்கெட் விற்பனைக்கான விலையை லிட்டருக்கு வெறும் 2 ரூபாயும், தயிருக்கான விற்பனை விலையை கிலோவுக்கு 4 ரூபாயும் மட்டும் குறைத்த நிலையில் விவசாய பொதுமக்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலையை தற்போது மீண்டும் லிட்டருக்கு 3 ரூபாய் வரை குறைத்துள்ளதால் ஒரு லிட்டர் பாலினை 30 ரூபாய்க்குள் கொள்முதல் செய்யும் சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே, விவசாய பெருமக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காத சூழ்நிலையில் கால்நடைகளுக்கான கலப்புத் தீவனம், தவிடு, புண்ணாக்கு, வைக்கோல் உள்ளிட்ட இடுபொருட்களுக்கான விலை 30% வரை அதிகரித்திருப்பதால் தற்போது பால் உற்பத்தி செய்வதற்கான செலவினங்கள், பணியாளர்கள் சம்பளம் சேர்த்து ஒரு லிட்டர் பாலுக்கு 60.00ரூபாய்க்கு மேல் அடக்க விலையாகிறது.
இந்த நிலையில் பால், தயிர், மோர் உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனையில் ஏற்பட்ட மந்தநிலை, கோடை மழை காரணமாக சற்று அதிகரித்த பால் உற்பத்தியால் பால் வரத்து அதிகமானது உள்ளிட்ட காரணிகளால் தனியார் பால் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களுக்கான பால் கொள்முதல் விலையை தொடர்ந்து குறைத்து கொண்டே செல்வதால் பாலுக்கான உரிய கொள்முதல் விலை கிடைக்காமல் பால் உற்பத்தியாளர்கள் பலரும் கால்நடை வளர்ப்பு தொழிலை முற்றிலுமாக தவிர்க்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
ஆனால் பால்வளத்துறை என்பது தமிழ்நாட்டில் பால் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் விநியோகம், விற்பனையில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள், பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்கள் என ஒட்டுமொத்தமாக பால்வளத்துறை சார்ந்தோரின் நலனிற்காக செயல்படாமல் தமிழ்நாட்டின் தினசரி பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் வெறும் 16% பங்களிப்பு கொண்ட தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினுக்கான துறையாக மட்டுமே செயல்பட்டு, 84% பங்களிப்பு கொண்ட தனியாருக்கு பால் வழங்கும் லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களையும், பால் முகவர்களையும் கண்டு கொள்ளாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து கொண்டு வருவதால் பால் உற்பத்தி அதிகரிக்கும் மற்றும் பால் விற்பனை குறையும் காலங்களில் தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்கள் உரிய கொள்முதல் விலை கிடைக்காமல் சொல்லெனா துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் ஆவின், தனியார் என்கிற பாகுபாடின்றி அந்நிறுவனங்களுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் அந்நிறுவனங்களின் பால் முகவர்களின் நலனிற்காக கடந்த 17ஆண்டுகாலமாக எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் எங்களை தனியார் பால் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலி என விமர்சனம் செய்யும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தனியார் பால் நிறுவனங்களின் தன்னிச்சையான முடிவுகளை தடுக்காமலும், தனியாருக்கு பால் வழங்கும் லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திடவும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை வைத்து பார்க்கும் போது தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக, எடுப்பார் கைப்பிள்ளையாக அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாரோ..? என்கிற மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது.
எனவே ஆவினுக்கு மட்டுமின்றி தனியாருக்கு பால் வழங்கும் லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரின் பால் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தனியார் பால் நிறுவனங்களை வரன்முறைபடுத்தி, அவை கொள்முதல் மற்றும் விற்பனை செய்கின்ற பாலுக்கான விலையை அரசே நிர்ணயம் செய்யக் கூடிய வகையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர சிறப்பு தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதோடு, அதனை அரசு தாமதமின்றி நிறைவேற்ற அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், ஏனைய எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனியார் பால் நிறுவனங்கள் மீண்டும் பால் கொள்முதல் விலையை குறைத்து ஒரு லிட்டர் பாலுக்கு 30 ரூபாய் என்கிற நிலைக்கு கீழ் கொண்டு வந்தன.
ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கான அடக்க விலை 60 ரூபாய்க்கு மேல் ஆகும் சூழலில் விவசாய பெருமக்கள் கால்நடை வளர்ப்பு, பாலுற்பத்தி செய்யும் தொழிலை செய்வது மறுபரிசீலனை செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே 16% பங்களிப்பு கொண்ட ஆவினுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு 84% பங்களிப்பு கொண்ட தனியாருக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்ய நடப்பு பட்ஜெட் மானியக் கோரிக்கை மீதான கூட்டத் தொடரில் தமிழ்நாடு அரசு சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும், அதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கட்சி பாகுபாடின்றி தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அச்சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.