A special seminar in Perambalur, titled Ayyappa devotees-modern thought
உரையாடல் என்ற அமைப்பு சார்பில், ஐயப்ப பக்தர்களும்-நவீன சிந்தனையும் என்ற தலைப்பில், பெரம்பலூரில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் நடந்த கருத்தரங்கத்துக்கு, மருத்துவர் கருணாகரன் தலைமை வகித்தார். பெரம்பலூர் அரசு மருத்துவமனை எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அறிவழகன் வரவேற்றார். பேராசிரியர் குமணன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கருத்தரங்கில், த.மு.எ.க.ச., மாநில துணை செயலர் கவிஞர் நந்தலாலா ஐயப்ப பக்தர்களும்-நவீன சிந்தனையும் என்ற தலைப்பில் பேசியதாவது:
சமூகத்தை முன்னேற்ற போராடுபவர்களுக்கும், சமூக முன்னேற்றத்தை தடுப்பவர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமாகவே ஐயப்பன் கோவில் சர்ச்சையை பார்க்கிறேன். இன்னும் 5 ஆண்டுகளுக்குள் பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. உலகில் உள்ள 12 புனித நதிகளில் 10 புனித நதிகள் இந்தியாவில் உள்ளன. ஆனால் அவைகள் அனைத்தும் மாசுப்பட்டுள்ளன. இன்று அனைத்து வயதினரும் செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர். ராமர் காலத்தைவிட ராமசாமி காலத்தில் பெண்கள் சுதந்திரமாக வாழ்ந்தார்கள். பிம்பங்களை உடையுங்கள். சமுகம் சிறக்கும் என்றார்.
இதில்மகப்பேறு சிறப்பு மருத்துவ நிபுணர் மருத்துவர் ஜெயலட்சுமி பெண்ணியம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். பேராசிரியர் சந்திரமவுலி கதை கூறினார். கருத்தரங்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். டாக்டர் கதிரவன் நன்றி கூறினார்.