Untochable-avoid-othsஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 30 ஆம் நாள் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது. இந்த நாளில் நமது நாட்டிற்காக உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 2 நிமிடம் மௌன அஞ்சலியும், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களாலும் எடுக்கபட்டு வருகின்றது.

இந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் சனிக்கிழமை அரசு விடுமுறை என்பதால், இன்று அதற்கான நிகழ்வு நடைபெற்றது.

அதனடிப்படையில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இன்று காலை 11.30 மணியளவில் இரண்டுநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதில் “இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக்குடிமகன் (அ) குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமாற உறுதியளிக்கின்றேன்.

அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதை உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமாற உறுதியளிக்கின்றேன்” என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வாசிக்க அவரைத்தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி, முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் கள்ளபிரான் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!