பெரம்பலூர் அருகே இன்று இரவு சாலையோர மரத்தில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 வயது சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம், மோகனூரைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் செந்தில் (27). இவர், தனது குடும்பத்துடன் திருச்சியில் தங்கி இருந்தார். இந்நிலையில், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அவரது சகோதரியான மோகன்ராஜ் மனைவி வசந்தி (33), இவரது மகன் ஹரீஸ் (8), செந்தில் குழந்தைகள் தரணி (6), தனணி (3) ஆகியோருடன் சென்னையிலிருந்து, திருச்சியை நோக்கி காரில் வந்துகொண்டிருந்தார். காரை செந்தில் ஓட்டிவந்தார்.
அப்போது கார், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகேயுள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்பராத விதமாக சாலையோர மரத்தில் கார் மோதி, அருகே உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த வசந்தி, ஹரீஸ் ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த செந்தில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார். தரணியும், தனணியும் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அழுது கொண்டிருக்கும் குழந்தைகளை போலீசார், செவிலியர்கள் ஆறுதல் தெரிவித்து அரவணைத்துள்ளனர்.
இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.