Accumulation of wealth beyond income: About Rs. 10 crore in the neighboring district to build a bungalow official! Will the enforcement department take action?
எல்லா அலுவலகத்திலும், லஞ்சம் வாங்குவதும் குற்றம்! கொடுப்பதும் குற்றம் என எழுதப்பட்டுள்ளது. இப்படி எழுதப்பட்டுள்ள இந்த வாசகம் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு விதிவிலக்கு போல….
நாடு சுதந்திரம் அடைந்து ஒரு பக்கம் சந்திராயன் சந்திரனுக்கு போகிறது, மற்றொரு பக்கம் உழைக்கும் சாமானியன் வருமான பற்றாக்குறை இல்லாமல் திணறுகிறான்.
சுதந்திரம் வாங்கி கொடுக்க பாடுபட்டவர்களின் ஒருவரான காந்தியின் பிறந்த நாளை இன்று நாடே கொண்டாடும் நிலையில், வெள்ளைக்காரன் யாருக்கு சுதந்திரம் கொடுத்தான் என்கின்ற சந்தேகம் வருகின்றது.
வெள்ளைக்ககாரர்களிடம் பெற்ற சுதந்திரம் இன்று கொள்ளைக்காரர்களின் கையில் போய் விட்டதா? என்கின்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல்வாதிகள் கோடிக்கணக்கான ரூபாயில் திட்டம் கொண்டு வந்து அதில் கமிசன் பார்த்து பல தலைமுறைக்கு சொத்துக்களை குவித்து வருகின்றனர் என்றால், வடிவேல் பாணியில் அவன் அவன் எடுக்கும் முடிவு நமக்கு சாதகமாகிவிடுகிறது என்பது போல, அரசியல்வாதிகள் போடும் திட்டங்கள் அல்வா சாப்பிடுவது போல் அதிகாரிகளுக்கு மிக சாதகமாக அமைந்து விடுகிறது.
ஒரு முறை அரசு பணிக்கு வந்து விட்டால், போதும், வெயில், மழை, காற்று என எது வந்தாலும் ஒரு சில அதிகாரிகளுக்கு சாதமாகிவிடுகிறது. நிவாரணம் வழங்குவதில் தொடங்கி, சீர் செய்யும் திட்டங்களை செய்வதில் கூட கட்டிங் பார்த்து விடுகிறார்கள்.
அதை நிரூபிக்கும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில், செய்யாத பல பணிகளை செய்ததாக பில் எடுத்தாக பலரின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டு ஒன்றிற்கு சுமார் ரூ. 500 கோடியில் இருந்து 1000 கோடி வரை திட்டப் பணிகள் நடக்கும். இதற்கு ஒப்பந்ததரார்களிடம் இருந்து, சுமார் 4 முதல் 8 சதவீதம் வரை கமிஷனாக பெறப்படுவதாக கூறப்படுகிறது. இதில் அதிகாரிகளுக்கு 1.5 சதவீதம் கிடைக்கும் என்றும், அதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ. 7.5 கோடி முதல் ரூ. 15 கோடி வரை கிடைக்கும் என கூறப்படுகிறது.
இது கருப்பு பணம் என்பதால், அரசியல்வாதிகள், வணிகர்கள், உறவினர்கள், ஒப்பந்ததாரர்கள் என பல விசுவாசமிக்க பினாமிகளிடம் கொடுத்து வைக்கின்றனர்.
மேலும், அந்த அதிகாரி மீது தலைமை செயலகத்திற்கு புகார் சென்றதால், மாற்றலாகும் நிலையில் கூட, அந்த அதிகாரிக்கு, ஒரு முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர், அந்த இடத்திற்கு அன்னியர் வேறு எவரும் வந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் பக்க பலமாக இருந்து உதவிக்கரம் நீட்டி வருவதால், படு ஸ்டாங்காக பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இதில் தைரியமான அந்த அதிகாரி ஒப்பந்ததாரர்களிடம் கறராக கட்டிங் பெற்று விடுகிறார். மேலும், ஒப்பந்ததரார்களை மதிப்பது கூட கிடையாது என்பதால் கட்டிங்கும் கொடுத்து விட்டு கவலை அடைந்துள்ளனர்.
அந்த அதிகாரி பக்கத்து மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரில் சுமார் ரூ.10 கோடி மதிப்பில் மிக பிரமாண்டமான பங்களா கட்டுவதை கண்டு கீழ் மட்டத்தில் பனிபுரியும் அதிகாரிகள் அழகி படத்தில் வரும் காமெடி போல் நொந்து போய் உள்ளனர்.
மேலும், அந்த அதிகாரி குறித்து செய்தி வெளியிட்டால், செய்தியாளர்கள் மீது பொய் புகார்களை தட்டிவிட்டு தன்னிடம் எடுப்பு வேலை பார்க்கும் துக்கடா கட்சிகளை பயன்படுத்தி, சாம, பேத தண்ட, அதிகாரத்தை பயன்படுத்துவார். ஆனால், சில அலுவலகத்தில் இவரது பொய் புகார்கள் எடுபடாமல் போய் விட்டதால், செய்தியாளர்களை கண்டாலே ஜென்ம விரோதியாக பார்ப்பது வழக்கம்.
லஞ்ச ஒழிப்புத் துறை தனது அயராத உழைப்பால் தீவிரமாக தகவல்களை திரட்டி வந்தாலும், அமலாக்கத்துறை, சமீபத்தில் அரசியல்வாதி ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தது போல இந்த அதிகாரியிடம் முறைகேடாக சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய்களை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.
மேலும், பெரம்பலுர் மாவட்டத்தில் உள்ள சுமார் 5 லட்சம் பேர் கட்டும் வரிப்பணம், ஆயிரம் பேர் ராஜ வாழ்க்கை வாழ செய்கிறது. கொள்ளைக்காரர்களிடம் இருந்து சாமானியன் சுதந்திரம் பெற இன்னொரு காந்தி வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையும் தீவிரமாக எழுந்துள்ளது.