Acting on smoking scenes should be banned! Nazar is the letter of PMK Ramadoss

தமிழக இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் நலன் கருதியும், பொதுநலன் கருதியும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கும்படி அறிவுறுத்த வேண்டும்; முடிந்தால், இதை நடிகர் சங்கத்தின் அடிப்படை விதியாகவே கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை ஆராய வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோருக்கும் இக்கடிதத்தின் நகல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்தக் கடிதங்கள் நடிகர் சங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பாமக நிறுவனர் ராமதாஸ், நடிகர் சங்கத்திற்கு எழுதிய கடிதத்தின் விவரம் வருமாறு:

அன்புடையீர்… வணக்கம்!

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் திரைத்துறைக்கு நீங்கள் ஆற்றி வரும் பணிகளுக்காக நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைப்படங்கள் மிகவும் வலிமை வாய்ந்த மக்கள் ஊடகங்கள். அவற்றின் மூலம் சமூகப் புரட்சியையும் ஏற்படுத்தலாம். சமூகச் சீரழிவையும் ஏற்படுத்தலாம். கப்பலோட்டியத் தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட திரைப்படங்கள் விடுதலைப் போராட்ட உணர்வை மக்களிடம் விதைத்தன என்பதை யாரும் மறுக்க முடியாது.

நாட்டில் போலியோ நோய் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்த போது, அதைத் தடுக்க தடுப்பு மருந்து உட்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் விதைக்க பெருந்துணையாக இருந்தவர்கள் திரைப்பட நடிகர்களும், கலைஞர்களும் தான். அதாவது திரைப்பட நடிகர்கள் நினைத்தால் மக்களுக்கு பயனுள்ள வகையிலான ஆக்கப்பூர்வமான விஷயங்களை மிகவும் எளிதாக செய்ய முடியும்.

ஆனால், அண்மைக்காலமாக திரைப்பட நடிகர்கள், குறிப்பாக கதாநாயகர்கள் தங்களின் பிரபலத்தை சமூகச் சீரழிவுக்காக பயன்படுத்துகிறார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. சில நடிகர்களின் திட்டமிட்ட செயல்பாடுகள் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் அமைந்துள்ளன.

உதாரணமாக, அண்மையில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் படமான சர்காரில் தொடக்கம் முதல் இறுதி வரை நடிகர் விஜய் ஏராளமான காட்சிகளில் புகைப்பிடித்திருக்கிறார். சர்கார் திரைப்படத்தின் தொடக்கக் காட்சியில் தொடங்கி இறுதிக் காட்சி வரை சுமார் 5 தருணங்களில் மொத்தம் 22 முறை புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அப்படத்தின் கதைக்கும், காட்சி அமைப்புகளுக்கும் எந்த இடத்திலும் புகைப் பிடிக்கும் காட்சிக்கு தேவையில்லை. அவற்றையெல்லாம் விட அபத்தமாக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்திலும் அனைவர் மத்தியிலும் விஜய் அப்பட்டமாக புகைப் பிடிக்கிறார்.

பொது இடங்களில் புகைப் பிடிக்க தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில், பொது இடத்தில் புகைப்பிடிப்பது போன்ற காட்சி வலிந்து திணிக்கப்பட்டுள்ளது.

சர்கார் திரைப்படத்தின் முதல் சுவரொட்டி கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அந்த சுவரொட்டியே விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியாகத் தான் அமைந்திருந்தது. அதைக் கண்டித்து அப்போதே நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

அதுமட்டுமின்றி எத்தகைய விளம்பரமாக இருந்தாலும் அதில் புகைப் பிடிக்கும் காட்சி இடம்பெற்றிருப்பது குற்றம் என்பதால், அது குறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து தமிழக அரசு பிறப்பித்த ஆணையின்படி நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி அடங்கிய சுவரொட்டி விளம்பரத்தை சன் பிக்சர்ஸ் நீக்கியது.

ஆனால், விளம்பரங்களில் நீக்கிய இக்காட்சியை படத்தில் பல இடங்களில் சர்கார் குழு திணித்துள்ளது. திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு தடை இல்லை; புகைப்பிடிப்பது உடல் நலனுக்கு தீங்கானது என்ற எச்சரிக்கை வாசகத்தை திரையில் ஓடவிட்டால் போதுமானது என்றாலும் கூட, நடிகர் விஜய்க்கு சமூகப் பொறுப்பு இருந்திருந்தால் புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்கியிருக்க வேண்டும்.

தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்திற்கும் மிகப்பெரிய வில்லனாக உருவெடுத்திருப்பது புகைப் பழக்கம் தான். அண்மைய புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் பேர் புகைப்பழக்கத்தால் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இறப்போர் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் அதிகமாகும்.

நேரடியாக புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறமிருக்க புகைப்பவர்கள் விடும் புகையை சுவாசிக்கும் பெண்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் கொடூரமானவை.

இத்தகைய கொடிய வில்லனை எதிர்த்து போராடுபவர்கள் தான் கதாநாயகர்களாக போற்றப்படுவார்கள். ஆனால், கதாநாயகர்களாக தங்களைக் காட்டிக் கொள்பவர்கள் புகை வில்லனுக்கு புகழ் பாடுபவர்களாக நடந்து கொண்டால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

தொடர்ச்சியாக புகைப்பிடிப்போரில் இருவரில் ஒருவர், அதாவது 50% அளவினர் முதுமையடையும் முன்பே, புகையிலையால் ஏற்படும் கொடிய நோயினால் இறக்கின்றனர். இவ்வாறு, இறந்துபோகும் வாடிக்கையாளர்களை ஈடு செய்வதற்காக சிறுவர்களிடம் சிகரெட் பழக்கத்தை திட்டமிட்டு சிகரெட் நிறுவனங்கள் திணிக்கின்றன. சிகரெட் பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகும் எல்லோருமே 21 வயதுக்கு முன்பே, அதாவது 10 முதல் 18 வயது பருவத்தில் தான் திசை மாறுகின்றனர்.

இவ்வாறு, இளம் வயதிலேயே சிகரெட் அடிமைகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் சிகரெட் நிறுவனங்களின் உலகளாவிய சதி ஆகும். திரைப்படங்களில் வரும் கதாநாயகர்கள் இளைஞர்களின் மானசீக வழிகாட்டிகளாக தோன்றுகிறார்கள்.

நடிகர்கள் பின்பற்றும் பழக்கங்களை சிறுவர்களும் பின்பற்றுகின்றனர். தொடங்குகிறார்கள். எனவே தான், சிகரெட் நிறுவங்கள் திட்டமிட்டு நடிகர்கள் மூலம் புகைபிடிக்கும் பழக்கத்தை திணிக்கின்றன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சிகரெட் விளம்பரங்களுக்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டு விட்ட நிலையில், திரைப்படங்கள் தான் சிறுவர்களிடம் சிகரெட்டைக் கொண்டு செல்ல கடைசி வாய்ப்பாக உள்ளன என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டக்ளஸ் பெட்சர் கூறியிருந்தார். அதை உறுதி செய்யும் வகையில் தான் சர்கார் திரைப்படத்தில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகள் திட்டமிட்டு திணிக்கப்பட்டுள்ளன.

திரைப்பட நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத் தாயகம் அமைப்பும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இது நடிகர்களுக்கான எதிர்ப்பு அல்ல. மாறாக, நடிகர்களின் புகை ஆதரவுக்கான எதிர்ப்பு தான். மருத்துவ உலகின் புனித நூலாக போற்றப்படும் லான்செட் இதழ் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் புகைபிடிக்க தொடங்கும் இளம் வயதினரில் 52% பேர் திரைப்படங்களை பார்த்து புகைபிடிக்க கற்றுகொள்வதாகக் கூறியது.

உலக சுகாதார நிறுவனம் 2003 ஆம் ஆண்டு வெளியிட்ட ‘‘பாலிவுட்: பலியா அல்லது நண்பனா’’ எனும் ஆய்வில்,‘இந்தியத் திரைப்படங்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை திணிக்கின்றன; சிகரெட் நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு புகைக்காட்சிகள் திணிக்கப்படுகின்றன’ என்பது ஆதாரங்களுடன்அம்பலப்படுத்தப்பட்டிருந்தது. புகை விளம்பரங்களுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், திரைப்பட நிறுவனங்கள் அவற்றுக்கு மறைமுக விளம்பரம் கொடுப்பது பெரும் பாவமாகும்.

இதற்கெல்லாம் மேலாக உண்மை நிகழ்வு ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒரு தாத்தா, பாட்டி அவர்களின் 10 வயது பெயரனிடம் பிறந்தநாளுக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்டனர். அதற்கு,‘‘எனக்கு சிகரெட் வேண்டும்’’ என்று பதிலளித்த அக்குழந்தை, காகிதத்தை சிகரெட் வடிவில் சுருட்டி ஸ்டைலாக வாயில் திணித்ததைப் பார்த்து அதிர்ந்து விட்டனர். அதன் செயலுக்கு திரைப்படக் காட்சிகள் தான் காரணம் என்பதை உணர்ந்த தாத்தாவும், பாட்டியும் குழந்தைக்கு அறிவுரை கூறி திருத்தினர்.

திரைப்படத்தில் வரும் காட்சிகளால் இளைஞர்கள் புகைக்கு அடிமையாகி விடக் கூடாது என்பதால் தான் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் புகைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததை எதிர்த்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஏற்கனவே இருமுறை கடிதம் எழுதியுள்ளேன். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது, அவரது வேண்டுகோளை ஏற்று நடிகர்கள் கமலஹாசன், அஜீத் விஜய் உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் இந்தி திரைப்பட நடிகர்கள் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை கைவிட்டனர்.

தொடக்கத்தில் இத்தகைய அறிவுரைகளை மதிக்காத நடிகர் ரஜினிகாந்த், பின்னர் 2012-ஆம் ஆண்டு அவரது பிறந்த நாள் விழாவில் பேசும் போது,‘‘அவர் (இராமதாசு) சொன்ன கருத்து ரொம்ப நல்ல கருத்து. அதற்கு பிறகு நான் நடிக்கின்ற படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சியை வைக்கவில்லை. ரசிகர்கள் புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால், கடந்த காலங்களில் அளித்த உறுதிமொழிகளை மறந்து விட்டு விஜய் போன்ற நடிகர்கள் மீண்டும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பது நன்மை தராது. காட்சிக்கு தேவை என்பதால் தான் அவ்வாறு நடிக்கிறோம் என்பது போன்ற சமாளிப்புகள் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயலாகும். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து பின்னாளில் தமிழகத்தின் முதல்வராக உயர்ந்த எம்.ஜி.ஆர் எந்தப் படத்திலும் மது குடிப்பது போன்றோ, சிகரெட் புகைப்பது போன்றோ நடிக்கவில்லை.

எனவே, பொதுநலன் கருதி தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கும்படி அறிவுறுத்த வேண்டுகிறேன்.

முடிந்தால், இதை நடிகர் சங்கத்தின் அடிப்படை விதியாகவே கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை ஆராயும்படியும் கேட்டுக் கொள்கிறேன், என அதில், தெரிவித்துள்ளார்.

(நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோருக்கும் இக்கடிதத்தின் நகல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்தக் கடிதங்கள் நடிகர் சங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன).

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!