Actress Vijay met with Anita’s family members at ariyalur
நீட் தேர்வால் எம்பிபிஎஸ் சீட் கிடைக்காமல் உயிரிழந்த மாணவி அனிதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றபோதும் நீட் தேர்வில் 86 மதிப்பெண் மட்டுமே பெற்றதால் அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதாவின் மருத்துவ கனவு தகர்ந்தது. இதனால் மனமுடைந்த அனிதா கடந்த 1ம் தேதி தனது உயிரை மாய்த்துக் கொண்டார். தனக்காக இல்லாவிட்டாலும் தன்னைப் போல கஷ்டப்படும் மாணவர்களுக்காக நீட்டை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று கடைசியாக அனிதா கூறியிருந்தார்.
இந்நிலையில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நடிகர் விஜய் அரியலூர் மாவட்டம் குழுமூரில் அனிதாவின் வீட்டிற்கு சென்று அவரது தந்தை மற்றும் சகோதரரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அனிதாவின் தந்தை சண்முகத்துடன் அவர் தரையில் அமர்ந்து ஆறுதல் சொன்னார்.