Adi Dravidian and tribal people can apply to buy their own land and do agriculture: Perambalur Collector Information!

மாதிரிப் படம்

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தாட்கோ மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் சொந்தமாக விவசாய நிலம் வாங்கி விவசாயத்தில் வருவாய் ஈட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கைத் தரத்தை மேன்மைப்படுத்தி மற்றவர்களுக்கு இணையாக வாழ வழி செய்யும் வகையில் அரசு தாட்கோ மூலமாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

நடப்பு 2022-2023 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின், சமூக பொருளாதார நிலை மேன்மையடைய, சொந்தமாக விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பு விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வறிப்பின்படி, இவ்வாண்டு 200 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த விவசாயத் தொழில் செய்பவர்களில் நில உடமைகளை அதிகரிக்கும் பொருட்டும், பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக விவசாய நிலம் வாங்கி விவசாயத்தில் வருவாய் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்திட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரைச் சார்ந்த 18 வயது முதல் 65 வயதிற்குட்பட்டவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் நிலம் வாங்க உத்தேசித்துள்ள நிலம் 2.5 ஏக்கர் நஞ்சைநிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்குள் இருக்கலாம் மற்றும் நிலத்தின் சந்தை மதிப்பில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5.00 இலட்சம் ஒரு பயனாளிக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் அல்லாத பிற இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய தாட்கோ இணையதளமான http://application.tahdco.com. & http://fast.tahdco.comஎன்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தாட்கோவில் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் நிலம் வாங்குதல், நிலம் மேம்பாட்டுதல் மற்றும் துரிதமின் இணைப்புத் திட்டம் ஆகிய விவசாய சார்ந்த திட்டங்களுக்கு மானியம் பெற்று பயனடைந்த பயனாளிகளும், தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமையால் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனம் “ஒருதுளிஅதிகப்பயிர்” திட்டத்திலும் பயனடையலாம். இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு விவசாய பெருமக்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் தோட்டக்கலைதுறையினை அணுகுமாறு தாட்கோ மேலாண்மை இயக்குரால் தெரிவிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!