Adi Dravidians can apply to stay and study in tribal welfare hostels, Collector informs.

2023-2024 ஆம் கல்வியாண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவ / மாணவிகள் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இம்மாவட்டத்தில் 20 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளும், 14 ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகளும், 1 பழங்குடியினர் நல மாணவியர் விடுதியும், 1 பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளி விடுதியும் என ஆக மொத்தம் 36 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

மேற்கண்ட விடுதிகளில் நான்காம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/கிருஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர் (85%) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணாக்கர் (10%) பிற வகுப்பினர்கள் (5%) என்ற விகிதத்தில் விடுதிகளில் சேர்ப்பதற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

பள்ளிக்கும் வீட்டிற்குமான தொலைவு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். (மாணவியருக்கும், பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய் அல்லது தந்தை வெளியூர்களில் பணிபுரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கும் மேற்படி நிபந்தனை பொருந்தாது). பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ,2,50,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இவ்விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் அனைத்து மாணவ / மாணவிகளுக்கும் உணவும், உறைவிடமும் இலவசமாக வழங்கப்படும். மேலும், 4 இணைச் சீருடைகளும், 10 ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ/மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி கையேடுகளும் இலவசமாக வழங்கப்படும்.

மாணவ/மாணவியர்களின் சேர்க்கை 2023-2024 –ஆம் கல்வியாண்டு முதல் விடுதி மேலாண்மை அமைப்பு ( Hostel Management System) என்ற செயலியின் மூலம் இணைய வழியில் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளதால் மாணவ/மாணவிகள் http://tnadw.hms.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த நடைமுறை புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதால், இணைய வழியில் விண்ணப்பிக்க மாணவ/மாணவிகளுக்கு உதவிடுமாறு சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,

பள்ளி மாணவ / மாணவியர் தாங்கள் சேரும் விடுதியில் விண்ணப்பங்களை பெற்று சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினிகளிடம் 07.06.2023 முதல் 30.06.2023 மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். மாணவ/மாணவியர் பள்ளி நிர்வாகத்திடம் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ/மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் க.கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!