After paying the income tax, fine for failing to register: Income tax notice

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளின் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு வருமான வரித்துறை செலுத்துவதில் உள்ள புதிய நடைமுறைகளை விளக்கும் வகையிலும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்வதில் உள்ள சந்தேகங்களை போக்கும் வகையிலுமான விழிப்புணர்வுக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி முன்னிலையில், திருச்சி மண்டல வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் ஆல்பர்ட் மனோகர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசுத் துறைகளில் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களின் வருமானவரி செலுத்துவது தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் பதிலளித்தார்

பின்னர் கூடுதல் ஆணையர் தெரிவித்ததாவது:

வருமானவரியினை அனைவரும் தவறாமல் முறையாக செலுத்த வேண்டும். பணம் பெற்று வழங்கும் அனைத்து அலுவலர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலர்கள் அனைவரும் வருமாவ வரியினை முறையாக தாக்கல் செய்துள்ளனரா என்று கண்காணிக்க வேண்டும்.

வருமானவரியினை செலுத்துவது மட்டுமல்லாது, வருமான வரி செலுத்தப்பட்டமை முறையாக பதிவு செய்வது என்பது மிகவும் முக்கியமானதாகும். வருமான வரி செலுத்திய பிறகும், அதனை முறையாக பதிவு செய்யாமல் இருந்தால் அதற்காக அபராதம் விதிக்கும் சூழல் உருவாகிவிடும். எனவே, அனைவரும் வருமான வரி செலுத்தினாலும், வருமான வரி இல்லையென்றாலும் அதனை முறையாக பதிவு செய்ய வேண்டும்.

ஒரு வருடத்தின் ஒவ்வொரு கால் பகுதிக்குமான வருமான வரியினை செலுத்தி அதற்கான தகவல்களை ஆன்லைனில் முறையாக பதிவு செய்ய வேண்டும் என்றும்,

வரி செலுத்தும் முறைகள் குறித்தும், இணையதளம் வாயிலாக வருமான வரி செலுத்துவது குறித்தும், வருமான வரி செலுத்தும்போது அலுவலர்களுக்கு ஏற்படும் குறைகள், தாமதங்கள் போன்றவற்றை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும், எந்தெந்த குறைபாடுகளுக்கு வருமான வரித்துறையின் எந்தெந்த அலுவலர்களை நாட வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.

அனைத்து துறை அலுவலர்களும் வருமான வரித்தொடர்பான சந்தேகங்களுக்கு சம்மந்தப்பட்ட வருமான வரித்துறை அலுவலகங்களை அணுகிப் பயன்பெறலாம். உங்களின் அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும் வருமான வரித்துறை அலுவலர்கள் முறையாக விளக்கமளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பெரம்பலூர் வருமான வரித்துறை அலுவலர்கள் லலிதா, அன்பழகன், திருச்சி வருமான வரித்துறை அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!