“Agreement for destroying indigenous companies is prohibited for 14 types of plastic products” allegations of milk agents association.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள இன்று விடுத்துள்ள அறிக்கை:

2019 ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் தடை விதித்து கடந்த 2018 ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 110 விதியின் கீழ் அறிவிப்பினை வெளியிட்டார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அந்த அறிவிப்பை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அப்போது வரவேற்பு தெரிவித்து தமிழக அரசுக்கு நன்றியும் தெரிவித்திருந்தோம். தமிழக அரசின் உள்நோக்கம் புரியாமல் வரவேற்றமைக்காக தற்போது வருந்துகிறோம்.

ஏனெனில் கடந்த 2018 ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்பானது சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் மற்றும் சுதேசி வணிக நிறுவனங்களை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே ஆதரவானது என்பதை காலம் கடந்து உணர்ந்திருக்கிறோம்.

ஏனெனில் ஒருமுறை பயன்படுத்தப்படும் 14வகையான நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களுக்கு மட்டுமே தடை என்கிற அறிவிப்பும், அதனை தொடர்ந்து தமிழக அரசின் அதிகாரிகளுடைய நடவடிக்கைகளும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு என்பது சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் மற்றும் சுதேசி வணிக நிறுவனங்களை அழித்து அவர்களை கார்ப்பரேட்களிடம் கையேந்தி நிற்க வைக்கும் சதியோ என்கிற மிகப்பெரிய சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

மேலும் சிறு வணிகர்கள் பயன்படுத்தும் கேரி பேக், முடிச்சு கவர், தண்ணீர் டம்ப்ளர், சிறு, சிறு தேனீர் கடைகள், உணவகங்களில் பார்சல் கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் கவர், மேஜை விரிப்புகள் உள்ளிட்ட சுமார் 14வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், இருப்பு வைத்திருக்கவும், உற்பத்தி செய்யவும் தடை விதித்துள்ள சூழ்நிலையில், பிஸ்கட், சிப்ஸ், சோப்பு, ஷாம்பு, மசாலா உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை பேக்கிங் செய்ய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களை உபயோகிக்கும் போது அதனை தடை செய்யாதது கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலியாக தமிழக அரசு மாறி சுதேசி வணிக நிறுவனங்களை அழித்தொழிக்கும் முயற்சியில் இறங்கியிருப்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது.

சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் மற்றும் சுதேசி வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் 14வகையான நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களால் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுகிறது, இயற்கை வளம் அழிந்து போகிறது, கால்நடைகள், நீர்வாழ் உயிரினங்கள் இறந்து போகின்றன என்றால் பிஸ்கட், சிப்ஸ், சோப்பு, ஷாம்பு, மசாலா உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் அனைத்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களை உபயோகப்படுத்தியே கார்ப்பரேட் நிறுவனங்கள் பேக்கிங் செய்கின்றன. அப்படியானால் அவ்வாறான நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களால் எந்த ஒரு பாதிப்பும் வராதா?

கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்படுத்தும் நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களுக்கு தடையில்லை என்றால் அவை பயன்படுத்தும் நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்கள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டால் அவை உடனே எளிதில் மக்கிப் போகுமா..?,

குப்பையில் வீசி எறியப்படும் அவ்வகை கழிவுகள் தீயிட்டு எரிக்கப்படும் போதோ அல்லது மண்ணுக்குள் புதையுறும் போதோ சுற்றுப்புறச்சூழல் மாசுபடாமல், இயற்கை வளம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுமா…?

குப்பையில் வீசி எறியப்படும் அல்லது கொட்டப்படும் நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களை திண்ணும் கால்நடைகள் நீண்ட ஆயுளோடு உயிர் வாழுமா..? நீர் நிலைகளில் சென்று சேரும் அந்த கழிவுகளை உண்ணும் நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து வராதா…? அவ்வகை கழிவுகளால் நீர்வழிப் பாதைகள் அடைபட்டு வெள்ளப்பெருக்கு ஏற்படாதா..?

சுதேசி நிறுவனங்கள் உணவுப் பொருட்களை நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களை கொண்டு பொட்டலம் (பார்சல்) போட்டு கொடுத்தால் அதனை உண்பவர்களுக்கு புற்றுநோய் வரும் என நடிகர், நடிகைகளை வைத்து தமிழக அரசே விளம்பரம் செய்கிறது. அப்படியானால் கார்ப்பரேட் நிறுவனங்கள் பொட்டலம் வகையில் உணவுப் பண்டங்களை விற்பனை செய்வதை வாங்கி சாப்பிட்டால் மட்டும் பொதுமக்களுக்கு புற்றுநோய் வராதா?

எனவே சிறு, குறு, நடுத்தர வணிகர்கள் மற்றும் சுதேசி வணிக நிறுவனங்களை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் இந்த சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும். அல்லது மிகவும் அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்து விட்டு, சுதேசி வணிக நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என்கிற பாகுபாடின்றி 100% நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களை ஒழிக்கும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்பட வேண்டும்.

மேலும் நெகிழி (பிளாஸ்டிக்) துறையில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு அவர்களுக்கான மாற்று வழியை போர்க்கால அடிப்படையில் உருவாக்கித்தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

அப்போது தான் நெகிழியை ஒழிப்பதற்கான அறிவிப்பு என்பது வெறும் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் சாத்தியமாகும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!