Alathur Union, Local Elections: Perambalur Administrative Officer inspection
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான தேர்தல் அறிவிக்கை 09.12.2019 அன்று வெளியிடப்பட்டு, அன்றைய தினம் முதலே வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகின்றது.
ஆலத்தூர் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளுக்குட்பட்ட மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்காக வாக்காளர்களால் செலுத்தப்படும் வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதனடிப்படையில் பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பெட்டி வைப்பறை மற்றும் வாக்கு எண்ணும் மையம் உள்ளிடவைகளுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சிப் பணியாளர் வே.சாந்தா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய வாக்குபெட்டிகள் அனைத்தும் வைக்கப்படும் அறைகளில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும், வாக்கு எண்ணும் நாளில் வேட்பாளர்களின் முகவர்கள், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் தொடர்பாக செய்தி சேகரிக்க வருகை தர உள்ள செய்தியாளர்களுக்கான ஊடக மையம் உள்ளிட்டவைகள் அமைய உள்ள இடங்கள் குறித்தும், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணும் நாளில் வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்காக வாக்காளர்களால் வாக்களிக்கும் வகையில் 174 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, இவ்வாக்குச் சாவடியில் பதிவாகும் வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பு அறைகளில் பாதுகாப்பாக வைப்பதற்காக தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ள அறைகளில் தேவையான மேஜைகள், பாதுகாப்பு வலைகள் உள்ளிட்டவைகள் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு இப்பணிகளை விரைந்து முடித்திடவும், மேலும் வாக்கு எண்ணும் நாளன்று வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவைகளையும், சிறப்பான முறையில் ஏற்படுத்தி தேர்தலை சுமூகமான முறையில் நடத்திட அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற அறிவுறுத்தினார்.