Allocate funds to encourage gardening in government offices: Perambalur Collector
பெரம்பலூர் ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:
தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நடப்பு நிதியாண்டில் தோட்டக்கலை சாராத நிறுவனங்கள் அரசு அலுவலகங்களில் தோட்டக்கலையை ஊக்கப்படுத்தும் நோக்கத்திற்காக நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இதன்கீழ் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மரக்கன்றுகள், வணிக மலர்செடிகள் 40 சதவீதம் மானியத்தில் நடவு செய்து வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சமூகநலத்துறை அமைச்சரின் விருப்பப்படி அத்துறையின்கீழ் நிர்வகிக்கப்படும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துமிக்க காய்கறிகளும் பழங்களும் கிடைக்கும் வண்ணம் முருங்கை மற்றும் பப்பாளி செடிகள் வழங்க இலக்கீடு பெறப்பட்டுள்ளது.
அதற்காக அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களுக்கு முருங்கை மற்றும் பப்பாளிச் செடிகள் வழங்குவதற்காக அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் இச்செடிகளின் உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 758 சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு 758 எண்கள் முருங்கை மற்றும் 758 பப்பாளி செடிகள் விநியோகிக்கப்பட உள்ளன.
மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் இடவசதியுள்ள அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்கள் தங்களுக்கு தேவையான முருங்கை மற்றும் பப்பாளி செடிகளை தோட்டக்கலை துணை இயக்குநரிடம் தெரிவித்து பெற்றுக்கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.