Anemia awareness campaign; Perambalur Collector Venkata Priya flagged off!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில், இரத்த சோகை விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் வெங்கடபிரியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “ஊட்டச்சத்து மாத விழாவிற்காக ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல்” என்ற கருப்பொருளைக் கொண்ட கையெழுத்து இயக்கத்தினையும் தொடங்கி வைத்தார்

பின்னர் அவர் தெரிவித்ததாவது:

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் “ஊட்டச்சத்து மாத விழாவிற்காக ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் இந்த ஆண்டு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களிடம் தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழா குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பிரச்சாரம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு இரத்த சோகை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இரத்த சோகை விழிப்புணர்வு நிகழ்வானது வரும் மூன்று மாதங்களுக்கு அனைத்து வீடுகளுக்கும் குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள், களப்பணியாளர்கள் நேரில் சென்று கணக்கெடுத்து ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி ஊட்டச்சத்து மிக்க பொருட்களை வழங்குவார்கள். ஊட்டச்சத்து குறைபாடு, இரத்த சோகை உள்ளிட்ட பல்வேறு சத்து குறைபாடுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தெருக்கூத்து, பொம்மலாட்டம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சத்தான உணவு வகைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய கண்காட்சியினையும் பார்வையிட்டார்.

இதில் மாவட்ட திட்ட அலுவலர் சுகந்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சவுந்தரவள்ளி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் அருணா, பூமா, பிரேமஜெயம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்:


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!