Answers to questions about Cauvery in the RTI Act in Hindi? P. Maniyarasan condemned!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் விடுத்துள்ள அறிக்கை!


காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்று அறிந்து கொள்ளவும், நடப்பு சாகுபடி ஆண்டில் சூன் – சூலை மாதங்களுக்குரிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளதா எனத் தெரிந்து கொள்ளவும், நடுவண் அரசின் நீராற்றல் துறைக்கு, கடந்த 16.07.2020 அன்று, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 8 வினாக்கள் கொண்ட கடிதம் புதுதில்லிக்கு அனுப்பி இருந்தேன்.


அதற்கு விடையளித்து நீராற்றல் துறையிலிருந்து வந்த இரண்டு கடிதங்கள், முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே உள்ளன.


தமிழ்நாட்டில் இந்தி மொழி – கல்வி மொழியோ அல்லது மாநில அலுவல் மொழியோ அல்ல! தமிழ்நாட்டில் தமிழும், ஆங்கிலமும் அலுவல் மொழியாக இருக்கின்றன. இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 343 ( 2 )-இன்படி இந்திய அரசின் அலுவல் மொழியாக ஆங்கிலம் தொடர்கிறது. உறுப்பு 343 ( 3 )-இன்கீழ் 1963இல் இயற்றப்பட்ட இந்திய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தில் செய்த திருத்தத்தின்படி, ஆங்கிலம் நடுவண் அரசுக்கும், மாநில அரசுக்குமிடையே தொடர்ந்து தொடர்பு மொழியாக நீடிக்கிறது. தமிழ்நாட்டில் மாநில அரசின் அலுவல் மொழியாக தமிழும், ஆங்கிலமும் இருக்கின்றன.


சட்டங்கள் இவ்வாறு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலிருந்து நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு, முழுக்க முழுக்க இந்தியில் விடை அளிப்பது சட்ட விரோதச் செயல்! அரசமைப்புச் சட்டம் மற்றும் இந்திய அலுவல் மொழிச் சட்டம், தமிழ்நாடு அலுவல் மொழிச் சட்டம் ஆகிய மூன்றுக்கும் எதிரான செயல்!

தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும், 25 இலட்சம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன நீராகவும் மக்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கும் காவிரி நீர் கர்நாடகத்திலிருந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வருகிறதா என்று அறிந்து கொள்வதற்கும், 2018இல் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு செயல் படுகின்றவா எனத் தெரிந்து கொள்வதற்கும், கோடிக்கணக்கான மக்கள் வாழ்க்கையில் அக்கறை கொண்டு கவலையோடு நான் கேட்ட கேள்விகளுக்கு – எனக்குத் தெரியாத மொழி மட்டுமின்றி – ஒற்றை ஆட்சிமொழியாக எந்தச் சட்டத்தின் கீழும் இல்லாத இந்தி மொழியில் நடுவண் அரசின் நீராற்றல் துறை விடையளித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரிய செயல்!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம், தனக்கு சொந்தமாக அலுவலகம் கொண்டிருக்கிறதா, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர், இப்பணியில் முழுநேர அதிகாரியாக இருக்கிறாரா அல்லது வேறொரு பணியில் இருந்து கொண்டு, கூடுதலாக இப்பொறுப்பில் இருக்கிறாரா, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றுக்கு அமர்த்தப்பட்ட முழுநேர அதிகாரிகள் எத்தனை பேர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரையறுத்த அளவின்படி நடப்பு சாகுபடி ஆண்டில் சூன் – சூலை மாதங்களுக்குரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளதா என்பவை உள்ளிட்ட 8 கேள்விகள் கேட்டிருந்தேன்.


இவற்றில் சிலவற்றிற்கு நீராற்றல் துறையின் புதுதில்லி தலைமையகமும், பெங்களுருவில் உள்ள அதன் தென்னகக் கண்காணிப்பகமும் எனக்கு அளித்த பதில் கடிதங்கள் முழுக்க முழுக்க இந்தியில் இருக்கின்றன (அவற்றின் நகலை இத்துடன் இணைத்துள்ளேன்). இதுகுறித்த எதிர்ப்புக் கடிதத்தை நடுவண் நீராற்றல் துறைக்கு அனுப்பியுள்ளேன்.

இதுபோல், தொடர்ந்து நரேந்திர மோடி அரசு திட்டமிட்டு தமிழ்நாட்டின் மீது இந்தியைத் திணித்துக் கொண்டுள்ளது. அண்மையில், இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் நடத்திய யோகா காணொலி பயிலரங்கில், முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே தில்லியிலிருந்து பேசினார்கள். தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்ட மருத்துவர்கள், தங்களுக்கு இந்தி தெரியாது ஆங்கிலத்தில் பேசுங்கள் எனக் கூறியபோது, அத்துறையின் செயலாளர், “இந்தி தெரியாவிட்டால் வெளியேறுங்கள்!” என்று கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள், வானூர்தி நிலையத்தில் நடுவண் தொழிற்சாலை காவல்படை அதிகாரியிடம் ஆங்கிலத்தில் ஒரு விவரம் கேட்டபோது, அவர் இந்தியில் விடையளித்திருக்கிறார். கனிமொழி, தனக்கு இந்தி தெரியாது என்று கூறியதற்கு, “இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா?” என எதிர்வினா கேட்டுள்ளார்.

இவையெல்லாம் தற்செயலான நிகழ்வுகள் அல்ல – தமிழ்நாட்டைக் குறிவைத்துத் தாக்கும் செயல்கள்! தமிழை நீக்கி விட்டு – இந்தியையும் சமற்கிருதத்தையும் கொண்டு வந்து நிலைநாட்ட வேண்டும் என்ற மோடி அரசின் வேலைத் திட்டத்தின் ஒரு பகுதி என்றே கருத வேண்டியுள்ளது.

தமிழ்நாடு அரசு, யாருக்கோ ஏற்பட்ட பாதிப்பு என்று எண்ணாமல், தனது மக்களுக்கும், மொழிக்கும் ஏற்பட்டுள்ள ஆபத்து என்பதை உணர்ந்து, தில்லி அரசிடம் உரியவாறு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்நாட்டில் தமிழ், புதுதில்லியுடன் செய்தித்தொடர்புக்கு ஆங்கிலம் என்ற சட்டப்படியான உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன், என அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!