Apply for Green Champion Award; Perambalur Collector Notification!
தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள் / அமைப்புகளுக்கு அரசின் சார்பில் பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1,00,000/- வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது.
கீழ்கண்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள் (அமைப்புகள்) / கல்வி நிறுவனங்கள் / குடியிருப்போர் நல சங்கங்கள் / தனிநபர்கள் / உள்ளாட்சி அமைப்புகள் / தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள் / பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்த வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை, பிற சுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்கள்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள் / நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்க 15.04.2024 அன்று கடைசி நாள் ஆகும்.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், அரியலூர். என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.