Article, Painting, Speech Contest for the Integrated School of Namakkal District

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது. இதில் 240 பேர் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண் கல்வியின் முக்கியத்துவம், இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் மற்றும் சுத்தம் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டிமை முதன்மை கல்வி அலுவலர் உஷா துவக்கிவைத்தார்.
இதில் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டியும்,4 மற்றும் 5ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டியும், 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் நடைபெற்றது.
போட்டியில் முதல் மூன்று இடங்களை வெற்றி பெறும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரத்து 500ம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரத்து 500ம் வழங்கப்படுகிறது.
முதல் மூன்று இடங்களை வெற்றி பெறும் 6 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.4ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரத்து 500ம், மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
முதல் மூன்று இடங்களை வெற்றி பெறும் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.4 ஆயிரத்து 500ம், இரண்டாம் பரிசாக ரூ.4 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரத்து 500ம் வழங்கப்படுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியண்ணன், திட்ட அலுவலர் குமார், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளிமனோகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவராமன் ஆகியோர் செய்திருந்தனர்.