Automatic doors in City buses: Tamil Nadu Transport Minister Sivasankar informs!

நகரப் பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில் தானியங்கி கதவுகள் அமைக்கவும், குன்னம் பகுதியில் அரசு போக்குவரத்து கழக பேருந்து பணிமனை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திம்மூர் வழியாக அரியலூர் – திருச்சி வரையிலான புதிய வழித்தட பேருந்து சேவையை துவக்கி வைத்த அவர் தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திம்மூர், கூடலுார் மற்றும் இலந்தைக்குழி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் கற்பகம் தலைமையில் இன்று தொடங்கி வைத்தார்கள். ஆலத்தூர்யூனியன் சேர்மன் ந.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திம்மூர் ஊராட்சி பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில், இன்று முதல் திம்மூரில் இருந்து நேரடியாக திருச்சி மற்றும் அரியலூர் சென்று வருவதற்கு ஏதுவாக அரியலூரில் அதிகாலை 4.55 மணிக்கு புறப்பட்டு 5.25 மணிக்கு திம்மூர் வந்தடைந்து, 5.30 மணிக்கு திம்மூரிலிருந்து புறப்பட்டு காலை 07.25 மணிக்கு திருச்சி சென்றடையும் வகையிலும், திருச்சியில் மதியம் 01.20 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு திம்மூர் வந்தடைந்து 3.35 மணிக்கு திம்மூரிலிருந்து புறப்பட்டு மாலை 3.50 மணிக்கு அரியலூர் சென்றடையும் வகையில் கூடுதல் பேருந்து வசதி சேவையினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, கூடலூர் ஊராட்சியில் ரூ.26.95 லட்சம் மதிப்பீட்டில் பிசி தெரு முதல் கருங்குளம் வரை மெட்டல் சாலை அமைக்கும் பணியினையும், இலந்தங்குழி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டிலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

குன்னம் பகுதியில் அரசு பேருந்து பணிமனை அமைக்க வேண்டும் என்று மக்கள் நீண்டநாள் கோரிக்கை வைத்துள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர், உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத 10 கோரிக்கைகளை உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில், அனுப்ப வேண்டும் என அறிவித்ததன் அடிப்படையில் குன்னம் சட்டமன்ற உறுப்பினராக எனது முதல் கோரிக்கையாக குன்னம் பகுதியில் அரசு போக்குவரத்து கழக பேருந்து பணிமனை வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

இதன் மூலம் குன்னம் பகுதி சுற்று வட்டார கிராமப் புறங்களுக்கு பேருந்துகள் இயக்குவதற்கு சுலபமாக இருக்கும் என்றும், பெரம்பலூர் பணிமனையில் நிலவும் தற்போதைய கூடுதல் பணிச்சுமை குறையும். தற்போது, போக்குவரத்துத்துறையின் சார்பாக பணிமனை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி நிலைமைக்கு ஏற்ப பேருந்து படிக்கட்டுகளில் யாரும் நின்று பயணம் செய்யாத வகையில், அனைவரின் பாதுகாப்பு நலன் கருதி அனைத்து நகர்ப்புற பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், வருவாய், ஊரக வளர்ச்சி, மற்றும் கொளக்காநத்தம் ஊராட்சித் தலைவர் ராகவன், இலந்தங்குழி ஊராட்சித் தலைவர் அகிலாராமசாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!