Avoid damaging rainwater harvesting systems : Perambalur Collector Notice || மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை சேதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலமாக, மழைக் காலங்களில் வீணாகும் மழைநீரை சேகரிக்கும் பொருட்டு பல்வேறு மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.
மழைநீர் சேகரிப்பு அமைப்பின் பயன்பாடு முழுமையாக கிடைக்கப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமானதாகும். தங்கள் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தடுப்பணைகளை பொதுமக்கள் சேதப்படுத்தாமல் இருக்க வேண்டும்.
மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் வேப்பூர், வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் வட்டாரங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளான தடுப்பணை, புதியகுட்டை அமைத்தல், ஊரணிகள் பழுது பார்த்தல், கிணறுகள் புனரமைப்பு பணி, இரும்பு வலை தடுப்பணை, கம்பிவலை தடுப்பணை மற்றும் கல் தடுப்பணை ஆகிய மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ரூபாய் எழுநூற்று ஐம்பத்தி இரண்டு லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் புதிய தொழில் நுட்பமாக மழைநீர் செறிவூட்டல் அமைப்பு 295 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல தடுப்பணைகளில் மழைநீர் செறிவூட்டல் அமைப்பு அமைக்கப்படவுள்ளது.
இதன்மூலமாக மழைக்காலங்களில் வீணாகும் மழைநீரை பூமிக்குள் செலுத்தி மழைநீர் வீணாவதை தடுப்பதோடு மட்டுமல்லாமல், நிலத்தடி நீரின் நீர்மட்டத்தை உயர்த்துகிறது. இதனால் இந்த மழைநீர் அமைப்பினை சுற்றியுள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து சாகுபடி பரப்பு அதிகரிக்கிறது. கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கிறது. மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் மண் அரிப்பினை தடுத்து நிறுத்துகிறது. மழைநீர் அமைப்பினை சுற்றியுள்ள நிலப்பகுதி எப்பொழுதும் பசுமையாக இருக்கும்.
இயற்கை வளத்தை பெருக்கக்கூடிய மழைநீர் செறிவூட்டல் அமைப்பிற்கு பொதுமக்கள் எந்தவித சேதாரமும் ஏற்படுத்தாமல், வீணாகும் மழைநீரை சேமிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தும் கட்டமைப்புகளுக்கு பாதுகாப்பு கொடுத்து இயற்கை வளத்தினை பெருக்கிட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.