Bicycle travel should be made mandatory across the state! PMK founder S.Ramadoss!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாட்டில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவதற்கான சிறிய, ஆனால், மிகவும் பயனளிக்கக்கூடிய திட்டத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களும் வாரந்தோறும் புதன்கிழமைகளில் இரு சக்கர ஊர்திகளிலோ, மகிழுந்து உள்ளிட்ட வாகனங்களிலோ அலுவலகம் வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இது நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலக ஊழியர்கள் புதன்கிழமைகளில் மிதிவண்டியில் அல்லது பொதுப்போக்குவரத்து மூலம் அலுவலகம் வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதை மதித்து வாரியத்தின் தலைவர் உதயன் நேற்று தமது இல்லத்திலிருந்து அலுவலகத்திற்கு மிதிவண்டியில் பயணம் செய்திருக்கிறார். பெரும்பான்மையான ஊழியர்கள் மிதிவண்டிகள் மூலமாகவும், வெகுதொலைவிலிருந்து வரும் பணியாளர்கள் பொதுப்போக்குவரத்து மூலமும் அலுவலகம் சென்றுள்ளனர். இந்த சிறிய முயற்சி மூலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் காற்று மாசு 20% குறைந்திருக்கிறது.

புவிவெப்பமயமாதல் தான் இன்றைய சூழலில் உலகுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. புவியின் சராசரி வெப்பநிலை தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தின் அளவான 14 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலிருந்து 1.1 டிகிரி அதிகரித்து 15.1 டிகிரியாக உயர்ந்துள்ளது. வெப்பநிலை உயர்வை 2 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் ஒட்டுமொத்த உலக நாடுகளும் போராடிக் கொண்டிருக்கின்றன. உலக அளவில் அதிக கரியமில வாயுவை வெளியேற்றும் மூன்றாவது நாடான இந்தியாவுக்கு புவிவெப்பமயமாதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் உண்டு. நிலக்கரி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் தான் புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த இயலும். அதற்கு இத்தகைய முயற்சிகள் பயனளிக்கும்.

காற்று மாசுவைக் குறைத்தல், புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்துதல் ஆகியவை குறித்த பரப்புரையை பாட்டாளி மக்கள் கட்சி பல பத்தாண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. அதற்கான முன்னுதாரணங்களையும் பா.ம.க. படைத்திருக்கிறது. எடுத்துக்காட்டாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக மகிழுந்தில் பயணித்தால் மிக அதிக அளவில் காற்று மாசு ஏற்படக்கூடும். அதைக் கருத்தில் கொண்டு 2006&11 காலத்தில் பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்த 18 பேரையும் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு மிதிவண்டியில் செல்ல வேண்டும் என ஆணையிட்டேன். அதையேற்று கட்சித் தலைவர் ஜி.கே.மணி, அப்போது 65 வயதைக் கடந்திருந்த பெண் உறுப்பினர் சக்தி பெ.கமலாம்பாள் உள்ளிட்ட அனைவரும் ஒரு கூட்டத் தொடர் முழுவதும் மிதிவண்டியில் சென்றனர். இதை மற்றவர்களும் கடைபிடிக்க வேண்டும் என கடந்த பத்தாண்டுகளில் நூறு முறை வலியுறுத்தியுள்ளேன்.

அதேபோல், இப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைமை அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சி படிப்படியாக விரிவுபடுத்தப்பட வேண்டும். நம்மை வாழவைக்கும் பூவுலகைக் காப்பதற்கான இந்தக் கடமையை இளைஞர்கள் தான் நிறைவேற்ற வேண்டும். இளைஞர்கள் நினைத்தால் இதை நிச்சயமாக சாதிக்க முடியும். மிதிவண்டியில் பயணிப்பதன் மூலம் உடலை கட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்; சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்; போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறித்த இடத்தை குறித்த காலத்திற்குள் சென்றடைய முடியும். எரிபொருள் வாகனங்களில் இத்தகைய பயன்கள் இல்லை.

ஐரோப்பிய நாடுகளுக்கு பலமுறை பயணம் செய்திருக்கிறேன். அங்குள்ள நகரங்களில் பெரும்பான்மையான மக்கள் இரு சக்கர ஊர்திகளுக்கு பதிலாக மிதிவண்டிகளைத் தான் பயன்படுத்துகின்றனர். அதற்காக அங்கு தனிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையிலும் அத்தகைய கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கடந்த 2008&ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட சென்னை மாநகருக்கான மாற்றுப் போக்குவரத்துத் திட்டம் என்ற ஆவணத்தில் வலியுறுத்தியுள்ளோம்.

இளைஞர்கள் மிதிவண்டியில் பயணம் செய்யும் போது முதலில் சற்றுத் தயக்கமாகத் தான் இருக்கும். ஆனால், அடுத்தடுத்த நாட்களில் மிதிவண்டி பயணம் உற்சாகத்தை அளிக்கத் தொடங்கும். அத்துடன் பூவுலகைக் காப்பதற்கான முயற்சிகளுக்கு நானும் பங்களிக்கிறேன் என்று என்னும் போது மகிழ்ச்சியுடன் மனநிறைவும் ஏற்படும். அதற்காகவே மிதிவண்டி பயணம் செய்ய இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும்.

மிதிவண்டிகளில் பயணிப்பதால் நமக்கும் சமூகத்திற்கும் ஏராளமான பயன்கள் கிடைக்கின்றன. இந்திய அளவில் செய்யப்பட்டுள்ள ஆய்வுகளின்படி இரு சக்கர மற்றும் நான்கு சக்கர ஊர்திகளை பயன்படுத்துவோரில் 50 விழுக்காட்டினர் குறைந்த தூர பயணத்திற்கு மிதிவண்டிகளை பயன்படுத்தத் தொடங்கினால் ஆண்டுக்கு ரூ.2,700 கோடி எரிபொருள் செலவை மிச்சப்படுத்த முடியும். அதுமட்டுமின்றி, இப்போது மகிழுந்துகள் – இரு சக்கர ஊர்திகளை பயன்படுத்துவோர் 8 கி.மீ.க்கும் குறைவான தூரத்துக்கு பயணிக்க, ஆண்டுக்கு 240 நாட்கள் மிதிவண்டிகளை பயன்படுத்துவதால் 10 ஆண்டுகளில் கிடைக்கும் மருத்துவப் பயன்களின் மதிப்பு மட்டும் ரூ.4.76 லட்சம் கோடி (ஆண்டுக்கு ரூ.47,670 கோடி), காற்று மாசு தடுக்கப்படுவதால் கிடைக்கும் பயன்கள் ரூ.24,100 கோடி ஆகும்.

மிதிவண்டிகள் ஏழைகளுக்கும் நன்மை தருகின்றன. ஏழைமக்கள் 3.5 கி.மீ தொலைவு வரை நடப்பதற்கு பதிலாக மிதிவண்டியில் பயணிப்பதால் மிச்சமாகும் உழைப்பு நேரத்தின் மதிப்பு ரூ.11,200 கோடி என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் மிதிவண்டி புரட்சி செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.85,670 கோடியை மிச்சப்படுத்த முடியும். இவை அனைத்துக்கும் மேலாக நமது சந்ததிகள் இந்த பூமியில் வாழ்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் மிதிவண்டி அவசியம்.

எனவே, புவிவெப்பமயமாதல், காற்று மாசு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் கடைபிடிக்கப்பட்ட வாரத்திற்கு ஒரு நாள் எரிபொருள் ஊர்திகளை தவிர்த்து விட்டு, மிதிவண்டி மற்றும் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற நடைமுறை முதற்கட்டமாக தமிழ்நாட்டில் அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு நீட்டிக்கப்பட வேண்டும். அடுத்தக்கட்டமாக தமிழ்நாட்டின் அனைவரும் வாரத்தில் ஒரு நாள் இதை கடைபிடிப்பதை நோக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்குத் தேவையான தனிப்பாதை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளையும் அரசு மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!