Big bounty on drinking water: The federal government must withdraw! PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:

நிலத்திலிருந்து விவசாயம் தவிர்த்த பிற பயன்பாடுகளுக்காக எடுக்கப்படும் தண்ணீருக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. குடிநீர் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாட்டுக்கு எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கும் கட்டணம் வசூலிப்பது மனிதநேயமற்ற மிகப்பெரிய கொள்ளையாகும்.

நிலத்தடி நீர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்குடன் இந்தக் கட்டணம் விதிக்கப்பட்டிருப்பதாகவும், வரும் ஜூன் மாதம் முதல் கட்டண முறை நடைமுறைக்கு வருவதாகவும் மத்திய அரசின் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, தொழிற்சாலைகள், புட்டிகளில் குடிநீரை அடைக்கும் குடிசைத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை நிலத்தடி நீரை எடுப்பதற்காக மத்திய அரசிடம் இருந்து மறுப்பின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. வீடுகளில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறுத் தேவைகளுக்காக ஓர் அங்குலத்துக்கும் குறையாத விட்டம் கொண்ட குழாயில் தினமும் 20 கன மீட்டர் வரை நிலத்தடி நீரை எடுப்பவர்கள், ஒரு கன மீட்டருக்கு ரூ.2 வரை கட்டணம் செலுத்த வேண்டும்; வீடுகளும் மத்திய அரசிடம் மறுப்பின்மை சான்றிதழ் பெற வேண்டுமாம்.

இனி வரும் காலங்களில் நீருக்காக மூன்றாவது உலகப் போர் மூளும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்படும் சூழலில் நிலத்தடி நீரை பாதுகாப்பது அவசியமானது. அதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து வகை நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கவை. தொழிற்சாலை உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதும் கூட ஏற்றுக்கொள்ளத்தக்கது தான். ஆனால், வீடுகளில் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரை இலவசமாக வழங்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும். அவ்வாறு இருக்கும் போது குடிநீருக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது மக்கள் மீது நடத்தப்படும் பொருளாதாரத் தாக்குதல் ஆகும்.

நிலத்தடி நீருக்கு கட்டணம் அறிவித்துள்ள மத்திய அரசின் நிலத்தடி நீர் ஆணையம், இந்த அறிவிப்பால் மக்கள் கோபம் அடைவார்கள் என்பதை உணர்ந்து கொண்டு முன்கூட்டியே இரு விளக்கங்களை அளித்திருக்கிறது. முதலாவது நிலத்தடி நீருக்காக வசூலிக்கப்படும் கட்டணம் என்பது அதற்கான விலை அல்ல; மாறாக நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதற்கான செலவு என்பதாகும். இரண்டாவது வேளாண் தேவைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்பதாகும். இரண்டுமே மக்களை ஏமாற்றுவதற்காக அளிக்கப்படும் விளக்கம் ஆகும். நிலத்தடி நீருக்கான கட்டணம் என்ன பெயரில் வசூலிக்கப்பட்டாலும் அது அதற்கான விலை தான். ஹிட்லருக்கு புத்தர் என்று பெயர் மாற்றம் செய்தால், அவர் எப்படி ஆசைகளைத் துறந்து, அமைதியை நேசிப்பவர் ஆகி விட மாட்டாரோ, அதேபோல் தான் பரமாரிப்புச் செலவு என்று கூறுவதாலேயே அது நிலத்தடி நீருக்கான கட்டணம் இல்லாமல் போய்விடாது.

அடுத்ததாக, விவசாயத்திற்காக எடுக்கப்படும் நிலத்தடி நீருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்று அறிவிப்பை நினைத்து உழவர்களும், மற்றவர்களும் நிம்மதி அடைய முடியாது. இது ஓர் ஏமாற்று வேலை ஆகும். வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு கட்டணம் இல்லை என்பது தற்காலிக சலுகை மட்டுமே. அடுத்த சில ஆண்டுகளில் வேளாண் பயன்பாட்டுக்கான தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பது தான் மத்திய அரசின் திட்டம் ஆகும்.

நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலிப்பது என்பது 1987-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு 2012-ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட தேசிய தண்ணீர் கொள்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். இதற்காக 2012&ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய வரைவு தண்ணீர் கொள்கையில்,‘‘விவசாயத் தேவைக்கான தண்ணீருக்கு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும், தண்ணீர் வழங்கும் பொறுப்பில் இருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும், தண்ணீர் வினியோகத்தை முழுக்க முழுக்க தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. பா.ம.க. உள்ளிட்ட சில கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் தண்ணீர் கொள்கையை மத்திய அரசு இறுதி செய்தது.

அதைத் தொடர்ந்து 2012-ஆம் ஆண்டு மே மாதம் தில்லியில் நடைபெற்ற தேசிய தண்ணீர் வார விழா தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்,‘‘நிலத்தடி நீர் இலவசமாகக் கிடைப்பதால்தான், அதன் மதிப்பு யாருக்கும் தெரியவில்லை. நீர் இலவசப் பொருளல்ல. அது ஒரு வணிகப் பொருள். உரிய விலை கொடுத்துத்தான் நிலத்தடி நீரை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை நாட்டுடைமையாக்கி, அதை தனியார் வசமோ அல்லது தனியாரோடு கூட்டுச் சேர்ந்தோ நிர்வாகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நிலத்தடி நீர் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட, தேசிய நீர் கொள்கை-2012 வடிவமைக்கப்படுகிறது’’ என்று கூறினார்.

2012 தேசிய நீர் கொள்கை, அதுதொடர்பான அப்போதைய பிரதமரின் வார்த்தைகளுக்குத் தான் இப்போது செயல்வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஆண்டு நிலத்தடி நீர்த்தேவை 2,53,00,000 கோடி லிட்டர் ஆகும். இதில் 10 விழுக்காடு, அதாவது 25,00,000 கோடி லிட்டர் மட்டுமே தொழிற்சாலைகள் மற்றும் குடிநீர் பயன்பாட்டுக்கானது ஆகும். மீதமுள்ள 2,28,00,000 கோடி லிட்டர் நிலத்தடி நீர் வேளாண் பயன்பாட்டுக்கானது ஆகும். நிலத்தடி நீரை நிர்வகிக்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்படும் போது, 90% நிலத்தடி நீர் இலவசமாக பயன்படுத்தப்படுவதை தனியார் நிறுவனங்கள் அனுமதிக்காது. அப்போது நிச்சயமாக வேளாண் பயன்பாட்டுக்கான தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் ஆபத்தை இப்போதே தடுக்க வேண்டும்.

எனவே, குடிநீர் உள்ளிட்ட வீட்டுப் பயன்பாடு, வேளாண் பயன்பாடு ஆகியவற்றுக்கான நிலத்தடி நீருக்கு எக்காலத்திலும், எந்த பெயரிலும் கட்டணம் வசூலிக்கப்படாது என அரசு உறுதியளிக்க வேண்டும். 2012&ஆம் ஆண்டின் தேசிய தண்ணீர் கொள்கையில் இந்த வாக்குறுதியை அரசு சேர்க்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!