Bike-bus collision near Perambalur this morning; One victim! Another one is hurt!!

பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் அன்னமங்கலம் பிரிவு அருகே இன்று காலை, தனியார் பஸ்சும், சாலையை கடக்க முயன்ற மொபட்டும் மோதிக் கொண்ட விபத்தில், மொபட்டில் வந்த விவசாயி பஸ்சில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

இன்று காலை பெரம்பலூர் மாவட்டம், மலையாளப்பட்டியில் இருந்து திருச்சியை நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ் வேப்பந்தட்டை – எசனைக்கு இடைப்பட்ட அன்னமங்கலம் பிரிவு சாலை அருகே வந்து போது, எசனையை சேர்ந்த விவசாயி மொபட்டில் சாலையை கடக்க முயன்றார் . அப்போது மொபட்டும் பஸ்சும் மோதிக் கொண்டன. இதில் எசனை கோனார் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் செல்வராஜ் (60) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையை விட்டு விலகி ஓடையில் இறங்கி வீட்டின் முன்புறம் உள்ள மரங்களில் மோதி நின்றது. பஸ்சில் வந்தவர்கள் கூக்குரலிட்டனர். அப்பகுதி சற்று நேரம் போர்களம் போல் காணப்பட்டது.

அன்னமங்கலம் கைகாட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் செந்தில்குமார் (45) என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டது .இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கியவர்களை, விபத்து மற்றும் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வராஜ் உடலை உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்தில் ஏராளமானோர் திரண்டதால் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அங்கு வந்த பொதுமக்கள் உரிய நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் சுமார் 10 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் சமரசம் செய்து பொதுமக்களை அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் தனியார் பஸ் டிரைவரான நாட்டார்மங்கலத்தை சேர்ந்த ரத்தினம் மகன் செல்வகுமார் (45) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!