BJP Annamalai charge to TN Govt: Rs 77 crore loss due to malpractice in purchase of nutritional package products

தமிழக அரசு வழங்கும் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை அளித்த பேட்டி:

தமிழக அரசு சார்பில் அம்மா நியூட்ரிஷியன் கிட் கொடுக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா பெயர் நீக்கப்பட்டு நியூட்ரிஷன் கிட் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து திட்டத்திற்காக 23.88 லட்சம் கிட்களை அரசு கொள்முதல் செய்கிறது. ஹெல்த் மிக்ஸ் வழங்குவதில் தமிழக அரசுக்கு ரூ.45 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

31.03.22 நடந்த கூட்டத்தில் இந்த திட்டத்தில் ஆவின் ஹெல்த் மிக்ஸ் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஏப்ரல் மாதம் சிலரது நிர்பந்தம் காரணமாக மறுபடியும் ஆவின் ஹெல்த் மிக்ஸ் நீக்கப்பட்டு தனியார் நிறுவனத்தின் மிக்ஸ் சேர்க்கப்பட்டது. திமுகவினரின் அச்சுறுத்தலால், ஆவின் பொருட்களை சேர்ப்பது நிறுத்தப்பட்டது. ஆவினில் வாங்காமல் அனிதா டெக்ஸ்காட் என்ற தனியார் நிறுவனத்திடம் வாங்கியதால் ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பை விநியோகித்த நிறுவனம் தான் நியூட்ரிஷியன் கிட்டை விநியோகம் செய்கிறது. இரும்பு சத்து டானிக் விலை ரூ.40. ஆனால், அரசு ரூ.224க்கு கொள்முதல் செய்கிறது. திமுக ஆடிட்டர் சண்முகசுந்தரம், அண்ணாநகர் எம்எல்ஏ மோகன் மகன் கார்த்தி தலையீட்டால் இழப்பு ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கு கிட் வழங்க 2 பொருட்களை தனியாரிடம் வாங்கியதில் அரசுக்கு ரூ.77 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்தின் புரோபிஎல் மிக்ஸ் டெண்டரை ரத்து செய்து ஆவினுக்கு வழங்க வேண்டும். ஆவின் நிறுவனத்தின் பொருட்களை தமிழக ரத்து செய்தது ஏன்? ஆவின் நிறுவனத்தின் பொருட்களை கொடுப்பதில் என்ன பிரச்னை? உடனடியாக டெண்டரை ரத்து செய்துவிட்டு ஆவினுக்கு ஒப்பந்தம் கொடுக்க வேண்டும். டெண்டரை இறுதி செய்வதில் தனிநபர் இருவரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எப்படி அனுமதித்தார். இதற்கு அமைச்சர் பதில் சொல்ல வேண்டும்.

ஜீ-ஸ்கொயர் நிறுவனத்தின் வளர்ச்சி கழகமாக சிம்டிஏ மாறியுள்ளது. இந்த நிறுவனம் நிலம் அப்ரூவலுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் ஒரு மணி நேரம் ஆன்லைன் லிங்க் செயல்பாட்டில் உள்ளது. பிறகு செயல்படாமல் போகிறது. இந்த நிறுவனம் 15 திட்டங்களை செய்து முடித்துள்ளது. புதிதாக 6 நிறுவனங்களை ஜீ-ஸ்கொயர் நிறுவனம் வாங்கியுள்ளது. கட்டுமான திட்டங்கள் ஜீ-ஸ்கொயர் நிறுவனத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி செயல்படுகிறார்.லஞ்சம் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.

கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. கோவையில் 122 ஏக்கருக்கான அனைத்து ஒப்புதல்களையும் அந்த நிறுவனம் 8 நாட்களில் பெற்றுள்ளது. லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்வோம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம். குற்றச்சாட்டுகளுக்காக நோட்டீஸ் வந்தாலும் சந்திக்க தயார், என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!