BJP State Agriculture Wing Request to Tamil Nadu Cm : Exploited natural resources; Show mercy to Tamil Nadu ! 

பாஜக மாநில விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு ஆயிரக்கணக்கான குவாரிகள் அனுமதி பெற்றும், பெறாமலும் முன்னாள், இன்னாள் திமுகவினரால் எவ்வித கட்டுப்பாடுமின்றி சக்தி வாய்ந்த வெடி குண்டுகளை வைத்து, தகர்த்து இயற்கை கனிமவளத்தை சுரண்டும் வகையில் களமிறங்கியுள்ளனர்.

10 அடி தோண்ட அனுமதி பெற்று 100 அடி வரையும், 100 அடி தோண்ட அனுமதி பெற்று 600 அடி வரை கற்களை தோண்டி எடுத்து கிருஷ்ணகிரியிலிருந்து பெங்களூருக்கும்,தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை, கடையம், குற்றாலம், செங்கோட்டை, புளியரை வழியாக கேரளாவின் முக்கிய நகரங்களுக்கு ஆயிரக்கணக்கான லாரிகள் கற்களுடன் அணி வகுத்துச் செல்கின்றன. 16 டன் ஏற்ற வேண்டிய லாரியில் 32 டன்னும், 25 டன் ஏற்ற வேண்டிய லாரியில் 50 டன்னும் எவ்வித தடையுமின்றி சென்று கொண்டிருக்கிறது.

ஒரு யூனிட்டு கல்லுக்கும், மண்ணுக்கும் ரூ.300 கொடுத்தால் தடையின்றி எங்கும் எடுத்துச் செல்லலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இது இயற்கைக்கு மிகப்பெரிய சவால். மலைகளும், ஆறுகளும் நிறைந்த கேரள அரசு ஒரு சட்டி மண்ணை அள்ள அனுமதிக்காதவகையில் கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற இயற்கை சுரண்டல் தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும்.

கடந்த ஓராண்டுகளில் ரூ.25,000 கோடிக்கு மதிப்பிலான சட்டவிரோதமாக கற்கள் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்பட்டுள்ளதாக விவசாய சங்கங்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் நடைபெற்ற குவாரி விபத்துக்கள் எவ்விதமான பாதுகாப்புமின்றி கண்மூடித்தனமாக பாறைகள் உடைக்கப்படுவதற்கு மிகச்சிறந்த உதாரணம்.மேலும் சட்டவிரோதமாக கல், மண் கடத்தும் லாரிகளை கண்காணித்து அவர்களிடமிருந்து பணம் வசூலிப்பதற்கென்று அதிகார மையத்தின் ஆசி பெற்ற ஒரு கூட்டம் பணிபுரிகின்றது என்பது வேதனையிலும் வேதனை. சுயசார்பு என்பது கனிமவளங்களை அண்டை மாநிலங்களுக்கு விற்பனை செய்வதல்ல.

தமிழக முதல்வரே கருணை காட்டுங்கள். நம் எதிர்கால சந்ததியினருக்கு மழைகளைத் தரும் மலைகளையாவது விட்டுவைப்போம், என அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!