Blatant democratic assassination in Sri Lanka: India must intervene! Anbumani MP

பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தர்மபுரி எம்.பியுமான அன்புமணி விடுத்துள்ள அறிக்கை :

இலங்கை நாடாளுமன்றத்தை நேற்று நள்ளிரவில் கலைத்த அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா, புதிய நாடாளுமன்றத்தை அமைக்க அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 5&ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார். 2020&ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பதவிக்காலம் இருக்கும் நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் திடீரென கலைத்திருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையாகும்.

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அந்நாட்டின் உள்விவகாரம் தான் என்றாலும் கூட, அதில் இந்தியாவின் பாதுகாப்பும், ஈழத்தமிழர் நலன்களும் அடங்கியிருப்பதால் இந்த விவகாரத்தில் எங்களுக்கு சம்பந்தமில்லை என்று கூறி இந்திய அரசு கடந்து செல்ல முடியாது. இலங்கையில் அரசியல் குழப்பங்கள் தொடங்கியதும், அதன் விளைவாக அந்நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டதும் இந்தியாவின் பூகோள நலன் சார்ந்த பிரச்சினையின் விளைவாகத் தான் என்பதை இந்தியப் பெருங்கடல் பகுதியை கட்டுக்குள் கொண்டு வர நடக்கும் அரசியல் புரிந்தவர்கள் அறிவார்கள்.

இலங்கை அதிபர் பதவியிலிருந்து எந்தக் காரணமும் இல்லாமல் தான் ரணில் விக்கிரமசிங்க நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல், பிரதமர் பதவியை வகிப்பதற்கு தேவையான எந்த பெரும்பான்மையும் இல்லாத நிலையில் தான் இராஜபக்சே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் இராஜபக்சே அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக எந்தெந்த வகைகளில் எல்லாம் சட்டத்தை வளைக்க முடியுமோ? அந்தந்த வகைகளில் எல்லாம் சட்டங்கள் வளைக்கப்பட்டன. இலங்கை நாடாளுமன்றத்தையே முடக்கும் அளவுக்கு அதிபர் சிறீசேனா சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சர்வாதிகாரியாக செயல்பட்டார்.

எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்பட்டனர். இலங்கைப் போர் முடிந்து பத்தாண்டுகள் ஆகும் நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை இதுவரை விடுவிக்காத ஆட்சியாளர்கள், இப்போது தமிழ் கைதிகளை விடுதலை செய்வதாகக் கூறி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவைப் பெற முயற்சிகள் செய்தனர். ஆனால், எந்த முயற்சியும் வெற்றி பெறாத நிலையில், நாடாளுமன்றத்தில் தோல்வியை தவிர்ப்பதற்காகத் தான் நாடாளுமன்றத்தையே கலைத்து அதிபர் சிறீசேனா ஆணையிட்டுள்ளார்.

இலங்கை அதிபர் சிறீசேனா அவரது சொந்த செல்வாக்கில் வெற்றி பெறவில்லை. 2015&ஆம் ஆண்டு தேர்தலில் இராஜபக்சேவுக்கு எதிரான தமிழர்களின் வாக்குகளால் தான் அதிபர் தேர்தலில் அவரால் வெற்றி பெற முடிந்தது. தமிழர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற சிறீசேனா தமது பழைய இனப்படுகொலை கூட்டாளியுடன் அணி சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது நியாயமல்ல.

ஜனவரி 5&ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் நிச்சயமாக நேர்மையாக நடக்காது. தமிழர்களையும், இராஜபக்சேவுக்கு எதிரானவர்களையும் மிரட்டியும், முறைகேடுகள் செய்தும் தேர்தலில் வெற்றி பெற சிறீசேனா& இராஜபக்சே கூட்டணி முயலும். அவ்வாறு நடந்தால் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும், இந்தியாவுக்கு எதிரான செயல்களும் தீவிரமடையும். இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சீனாவுக்கு தாரைவார்க்கப்படலாம். அவை இந்தியாவின் பாதுகாப்புக்கு நிரந்தர ஆபத்தை ஏற்படுத்தும்.

இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து விக்கிரமசிங்க நீக்கப்பட்டு இராஜபக்சே நியமிக்கப்பட்ட போதே இந்தியா இந்த விவகாரத்தில் தலையிட்டிருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்திருக்காது. இந்த விஷயத்தில் இந்தியா இனியும் அலட்சியம் காட்டாமல், இலங்கை சிக்கலில் உடனடியாகத் தலையிட்டு ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!