Breaking the locked house in Perambalur, 10 pound jewelry, car theft: police investigation
பெரம்பலூர், துறைமங்களம் 8 வது வார்டை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 31), இவர் துபாய் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா (25), வீட்டை பூட்டி விட்டு, பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் மகேந்திரன் வீட்டை நோட்டமிட்ட திருடர்கள், நள்ளிரவு வீட்டின் கதவின் பூட்டை பெயர்த்து உள்ளே புகுந்த சிலர் பீரோ மற்றும் லாக்கரை உடைத்துள்ளனர். அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், விலை உயர்ந்த 2 பட்டுப்புடவைகளை எடுத்த கொள்ளையர்களுக்கு, வீட்டில் துலாவியதில், வீட்டில் நிறுத்தப்பட்டடிருந்த புத்தம் புதிய காரின் சாவியும் திருடர்கள் கையில் சிக்கியது. திருடர்கள் போர்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த 6.5 லட்சம் மதிப்பிலான மாருதி இக்னீஸ் காரை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதையறிந்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு, மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்களுடன் சென்று ஆய்வு செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருடர்கள் பண்டிகக்காலம் தொடங்குவதால் இன்று முதல் பெரம்பலூர் பகுதியில் திருடர்கள் கைவரிசையை காட்ட தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் உஷாராகி வருகின்றனர். மேலும், காவல் துறையினர், வீட்டை பூட்டி செல்லும் போது திருட்டை தடுக்க தகவல் தெரிவிக்க பல முறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியும் அலட்சியம் செய்வதாலேயே, இது திருடர்களுக்கு சாதகமாகிவிடுகிறது. எனவே, பொதுமக்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.