Bus collides with ambulance near Perambalur; 3 people died!
பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடத்த விபத்தில், சிக்கியவர்களை மீட்டுக் கொண்டு இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட மூன்று பேர் பலியானர்கள், 5 பேர் படுகாயமடைந்தனர்.
பெரம்பலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு பாதை தனியார் பள்ளி அருகே, விழுப்புரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த டிராக்டரை, திருவண்ணாமலையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற மகேந்திரா மேக்ஸ் கேப் வேன் முந்தி செல்ல முயன்றது. அப்போது இரு வாகனங்களும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி டிராக்டர் சாலை நடுவே தலைக்குப்புற கவிழ்ந்தும், மேக்ஸ் கேப் வேன் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரிலும் மோதியும் நின்று கொண்டிருந்தது.
இந்த சாலை விபத்து பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட மருத்துவ உதவியாளர் விபத்தில், காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக ஸ்ட்ரெச்சரில் மீட்டு கொண்டிருந்தனர். அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஆம்னி பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான வாகனங்கள் மீது அதிவேகமாக அடுத்தடுத்து மோதியது.
சற்று எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த திடீர் சாலை விபத்தில், 108 ஆம்புலன்ஸ் டிரைவரான பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தை சேர்ந்த இன்னாசி முத்து மகன் ராஜேந்திரன்(45), மற்றும் மீட்பு பணியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, வேனில் வந்த திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்த அழகர்சாமி மகன் குப்புசாமி (60), சுப்பிரமணி மகள் கவிப்பிரியா(22), ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.
மேலும், விபத்துக்குள்ளான டிராக்டர் ஓட்டுனரான ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்ததூரை சேர்ந்த கிழவன்(45), என்பவரும்
அவருடன் பயணித்த சாமிதாஸ்(40), சேகர்(40), என்பவரும், வேனில் பயணித்த கணேசன்(42), நீலா(65), ஆகிய ஐந்து பேரும் படுகாயம் அடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்தடுத்து டிராக்டர், வேன், ஆம்புலன்ஸ், பேருந்து என 4 வாகனங்களும் ஒன்றோடு ஒன்றிய மோதி ஏற்பட்ட விபத்தினால், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் எஸ்.பி., ஷ்யாமளாதேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், உயிர் பலிகளுக்கு காரணமான ஆம்னி பஸ் டிரைவரான திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே உள்ள கொப்பங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சுடலை(42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆம்புலன்ஸ் மீதும் விபத்துக்குள்ளான வாகனங்கள் மீதும் ஆம்னி பேருந்து மோதிய வேகத்தில், சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனம் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரை கடந்து எதிர் திசையில் சென்று அங்குள்ள ஒரு கட்டிட காம்பவுண்ட் சுவர் மீது மோதி சாலையோர பள்ளத்திற்குள் விழுந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று அதிகாலையில் விபத்தில் காயமடைந்தவர்களை, தகவல் அறிந்த ஒரு சில நிமிடங்களிலேயே அரசு தலைமை மருத்துவமனைக்கு கலெக்டர் க.கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டு சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.