Cancel the Toll fee Fully! Unworthy Of Traveling: PMK Ramadoss

Model

பா.ம.க. நிறுவனர் ராமதாசு விடுத்துள்ள அறிக்கை:

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜாபேட்டை வரையிலான பகுதி சரியாக பராமரிக்கப்படாததற்காக கடும் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அந்தச் சாலை சீரமைக்கப்படும் வரை 50% சுங்கக்கட்டணம் மட்டும் தான் வசூலிக்க வேண்டும் என்று ஏன் ஆணையிடக் கூடாது? என வினா எழுப்பியுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இந்த ஆதங்கம் மிகவும் நியாயமானது; இதன் மூலம் அச்சாலையை பயன்படுத்துவோரின் உள்ளக் குமுறல்களை நீதிபதிகள் எதிரொலித்துள்ளனர்.

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சத்தியநாராயணா, தமது பயண அனுபவத்தின் அடிப்படையில் சென்னை மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலை மிக மோசமான நிலையில் இருப்பதாகவும், அது குறித்து உயர்நீதிமன்றமே பொதுநல வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் தலைமை நீதியரசருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனடிப்படையில் உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து பதிவு செய்த பொதுநல வழக்கு, நீதியரசர்கள் சத்தியநாராயணா, சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்த போது அவர்கள் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளனர். மதுரவாயல் – வாலாஜாபேட்டை இடையிலான சாலை மோசமாக உள்ள நிலையில், அதை முழுமையாக மீண்டும் அமைப்பதற்கு பதிலாக ஆங்காங்கே மட்டும் சீரமைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர்கள், இத்தகைய சூழலில் நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கான கட்டணத்தை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு உயர்த்தி வசூலிப்பது முறையல்ல என்றும் கூறியிருக்கின்றனர்.

சென்னை மதுரவாயல் – வாலாஜாபேட்டை இடையிலான தேசிய நெடுஞ்சாலையின் தரம் தொடர்பாக நீதிபதிகள் கூறியுள்ள கருத்துகள் அனைத்தும் மிகச் சரியானவை. சென்னை – பெங்களூர் இடையிலான சாலை 6 வழிச் சாலை என்று அறிவிக்கப்பட்ட பிறகும் சென்னை – வாலாஜா இடையிலான நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாகவே இருப்பது குறித்தும், அந்த சாலையும் முறையாக பராமரிக்கப்படாதது மற்றும் அதனால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் 25.07.2017, 17.07.2018 ஆகிய தேதிகளில் விரிவான அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறேன். அத்துடன் நிற்காமல் அப்போதைய மத்திய நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சரிடம் நேரிலும், கடிதம் மூலமாகவும் பலமுறை வலியுறுத்திருக்கிறேன். ஆனாலும் பயனில்லை.

அதுமட்டுமின்றி, மதுரவாயல் – வாலாஜா சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும், சாலையை முழுமையாக சீரமைக்கும் வரை அச்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது என்றும் வலியுறுத்தி வாலாஜா வட்டாட்சியர் அலுவலகம் முன் கடந்த 14-ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில துணைப் பொதுச்செயலாளர் சரவணன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக ஏன் வழக்கு தொடரக்கூடாது என்று விளக்கம் கேட்டு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மதுரவாயல்- வாலாஜாப்பேட்டை நெடுஞ்சாலை மட்டுமின்றி மேலும் பல சாலைகளிலும் இதே நிலையே காணப்படுகிறது. கடந்த 17-ஆம் தேதி கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதரத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ், ‘‘தேசிய நெடுஞ்சாலைகளில் எந்தவிதமான பராமரிப்பும் செய்யப்படாத நிலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது. இதை வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் பா.ம.க. சார்பில் வழக்கு தொடரப்படும்’’ என அறிவித்திருந்தார். அதே கருத்தை இப்போது உயர்நீதிமன்ற நீதியரசர்களும் கூறியிருப்பது மட்டுமின்றி, உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கும் தொடர்ந்துள்ளது. மக்கள் முதல் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் வரை அனைவரின் மனநிலையும் இந்த விஷயத்தின் ஒன்றாக இருப்பதை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இனியாவது உணர்ந்து தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 43 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவை அனைத்திலும் ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், நெடுஞ்சாலைகளை பாரமரிப்பதே இல்லை. உளுந்தூர்ப்பேட்டை – சேலம் இடையிலான 136 கி.மீ நீள நான்குவழிச் சாலை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்பதுடன், எட்டு இடங்களில் புறவழிச்சாலைகள் முழுமையாக அமைக்கப்படவில்லை. பல கிலோ மீட்டர் தொலைவுக்கு இருவழித்தடமாக உள்ள புறவழிச்சாலையில் ஏராளமாக விபத்துகள் ஏற்படுகின்றன. தமிழகத்திலேயே மிக அதிக விபத்துகள் ஏற்படும் சாலை இது தான். பல ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, ஒவ்வொரு ஆண்டும் சுங்கக்கட்டணம் மட்டும் தவறாமல் உயர்த்தப்படுகிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய விதிகளின்படி சுங்கக்கட்டணத்தில் 40% பராமரிப்புக்காக செலவிடப்பட வேண்டும். ஆனால், நெடுஞ்சாலைகள் அமைத்து சுங்கக் கட்டணம் வசூலிக்கும் எந்த நிறுவனமும் அதில் 4% கூட பரமரிப்புக்காக செலவிடவில்லை என்பது தான் உண்மை. இதைவிடக் கொடுமை என்னவென்றால், பல தேசிய நெடுஞ்சாலைகளில், அவற்றை அமைக்க ஆன செலவிடப்பட்ட தொகை முழுமையாக எடுக்கப்பட்ட பிறகும், சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்படாமல் முழுமையாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற சுரண்டல்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட சுரண்டல் மையங்களாக சுங்கச் சாவடிகள் திகழ்கின்றன. இந்த பூனைக்கு யார் மணி கட்டுவார்கள் என்று ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்திருந்த வேளையில், சென்னை உயர்நீதிமன்றமே மணி கட்ட முன்வந்திருப்பது நிம்மதியும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. இதை உணர்ந்து சரியாக பராமரிக்கப்படாத சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்க மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். அதேபோல், முதலீடு முழுமையாக எடுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டு, பராமரிப்புக்காக மட்டும் 40% கட்டணம் வசூலிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை அரசு செய்யாத பட்சத்தில் உரிய உத்தரவுகளை உயர்நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!