Cave Bridge on National Highway near Perambalur; Peace talks with the public!
பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்படும் உயர்மட்டப்பாலத்தின் கீழே செட்டிகுளம் பகுதியிலும், வட்டாட்சியர் அலுவலகம் அருகிலும் பொதுமக்கள் சென்று வர குகைப்பாலம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் கற்பகம் தலைமையில் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் இரூர் பகுதி மக்களுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
விளம்பரம்:
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட இரூர் பகுதியில் தொடர்ந்து விபத்து நடைபெறுவதால் உயர்மட்ட மேம்பாலம் அமைத்திட ரூ.25.22 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கியுள்ளது.
இந்தப் பாலமானது சுமார் 500 மீட்டர் நீளத்தில் அமையவுள்ளது. பாலத்தின் கீழ் காரை பிரிவு சாலை பகுதியிலும், ஆலத்துார் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திலும் என இரண்டு இடங்களில் பாலத்தின் அடியில் வாகனங்கள் சென்று வரும் வகையில் பாதைகள் அமைக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், அப்பகுதி பொதுமக்கள் பாலத்தின் அடியில் செட்டிகுளம் கோவில் வளைவு உள்ள இடத்திலும், ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் உள்ள இடத்திலும் வாகனங்கள் சென்று வரும் வகையில் பாலத்தின் கீழே பாதைகள் வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.
இதனால் பாலம் அமைக்கும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை துறையின் அலுவலர்களும் இதில்பங்கேற்றனர்.
உயர்மட்ட பாலம் அமைக்க உரிய ஆய்வு செய்யப்பட்டு பாலத்திற்கான மாதிரி தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தால் ஒப்புதல் பெறப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த உயர் மட்ட பாலத்தின் கீழே பொதுமக்கள் எளிதில் சென்று வர 2 இடங்களில் பாதை அமைக்கும் வகையில்தான் வடிவமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட அமைப்பை மாற்றுவதற்கு மீண்டும் ஒப்புதல் பெற வேண்டும். பொதுமக்கள் கேட்கும் வகையில் 2 கூடுதல் பாதைகள் அமைத்தால் பாலத்தின் நீளத்தை இன்னும் அதிகமாக்க நேரிடும் இதற்காக ஆகும் செலவை மறு மதிப்பீடு செய்து அதற்கான அனுமதி வாங்குவதற்கு கூடுதல் காலம் தேவைப்படும் என்றும், பாலம் அமைப்பதில் காலதாமதம் ஏற்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது.
பாலத்தின் அடியில் பொதுமக்கள் சென்று வர ஏதுவாக பாலத்தின் கீழே ஏற்கனவே 2 இடங்களில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர் கோரிக்கைகள் வைத்ததன் அடிப்படையில் நமது மாவட்டத்திற்கு உயர்மட்ட பாலம் கிடைத்திருக்கிறது. எனவே பாலப் பணிகள் தொடர்ந்து நடைபெற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதன் பேரில், அப்பகுதி பொதுமக்களும் ஏற்றுக் கொண்டனர். கூட்டத்தில் அரசு பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.