CBI probe into ministers’ prosecution scandal Must investigate! Anbumani

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி விடுத்துள்ள அறிக்கை :

மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பார்கள், அதேபோல் தான், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வழியில் அவரது அமைச்சரவை சகாக்களும் பினாமி பெயர்களில் நிறுவனங்களைத் தொடங்கி அரசு ஒப்பந்தங்களைப் பெற்று கோடிக்கணக்கில் சொத்துகளை குவித்திருப்பதை ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. மக்களின் வரிப்பணத்தை சுரண்டும் இத்தகைய மோசடிகள் கண்டிக்கத்தக்கவை.

உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் தொடங்கப்பட்ட பினாமி நிறுவனங்களுக்குத் தான் உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்பந்த பணிகள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக கே.சி.பி எஞ்சினியர்ஸ் நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களும், கோவை மாநகராட்சி சார்பில் ரூ.50 கோடி மதிப்புள்ள பணிகளும் வழங்கப்பட்டுள்ளன. சேலம் திருப்பூர், திருச்சி ஆகிய மாநகராட்சிகளிலும் ஒப்பந்தப் பணிகளில் இந்த நிறுவனத்திற்கு விதிகளை மீறி சலுகைகள் காட்டப்பட்டுள்ளன. அதேபோல், பி. செந்தில் அன்கோ நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சி சார்பில் ரூ.15 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. வர்தன் இன்ஃபிராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்திற்கு கோவை மற்றும் சென்னை மாநகராட்சிகள் ரூ.9 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களை வழங்கியுள்ளன. இதுதவிர சென்னை மாநகராட்சி பணிகளுக்காக தொழிலாளர்களை வழங்குவதற்கான பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தமும் இந்த நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த விவரங்கள் அனைத்தையும் டைம்ஸ் நவ் ஆங்கிலத் தொலைக்காட்சி ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.

ஒப்பந்தம் பெற்ற 3 நிறுவனங்களுமே அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்களின் பெயர்களில் நடத்தப்படுபவை தான் என்று கூறப்படுகிறது. இவற்றில் கே.சி.பி எஞ்சினியர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்த ராஜன் சந்திரசேகர் அமைச்சரின் உதவியாளரைப் போல செயல்பட்டவர். இப்போது இவர் தான் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவின் வெளியீட்டாளராக உள்ளார். கே.சி.பி எஞ்சினியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சந்திரப்பிரகாசும் அமைச்சருக்கு நெருக்கமானவர். இவரது தாயார் சுந்தரி கிருஷ்ணகுமார் தான் வர்தன் இன்ஃபிராஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்தின் அதிபர் ஆவார். பி. செந்தில் அன்கோ அமைச்சர் வேலுமணியின் உடன்பிறந்த சகோதரர் எஸ்.பி.அன்பரசனால் நடத்தப்படும் நிறுவனம் ஆகும். இவற்றில் கே.சி.பி எஞ்சினியர்ஸ் , நமது அம்மா நாளிதழ் அலுவலகம், நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஆகியவை சென்னையில் ஒரே அலுவலகத்தில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர கன்ஸ்ட்ரானிக்ஸ், கன்ஸ்ட்ரோமால் குட்ஸ் பிடைவேட் லிமிடெட், ஆலயம் அறக்கட்டளை ஆகிய பெயர்களிலும் புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிடப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகத்தில் இருப்பவர்கள் தான் இந்த நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். இவற்றுக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படவுள்ளன. ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் அனைத்தும் கடந்த ஆண்டில் அமைச்சர் வேலுமணியின் பினாமி நிறுவனங்களான ஸ்கைராம் அட்வர்டைசிங், ஷைன் அட்வர்டைசிங், பைன் ஆர்ட்ஸ் கம்யூனிகேசன்ஸ் ஆகிய 3 நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்துக்கும் தாமோதரன் சீனிவாசன் என்பவரே இயக்குனராக உள்ளார். நிழற்குடை விளம்பர ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் மட்டும் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1250 கோடி இழப்பு ஏற்பட்டது. இந்த நிறுவனங்கள் அனைத்துமே தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் பல கோடி லாபம் ஈட்டியிருக்கின்றன.

தருமபுரி மாவட்டத்திலும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் பினாமிகளுக்குத் தான் அரசு கட்டுமான பணிகள் ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. பாலக்கோடு தொகுதியில் நடைபெறும் பெரும்பாலான பணிகளுக்கான ஒப்பந்தங்களும் அமைச்சரின் மருமகன் ரவிஷங்கர் நடத்தும் பாக்யலட்சுமி நிறுவனத்துக்கு வழங்கப்படுகின்றன. பென்னாகரம் தொகுதியில் டி.ஆர். அன்பழகன், கே.வி. ரங்கநாதன், தருமபுரி தொகுதியில் கோவிந்தசாமி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய தொகுதிகளில் மதிவாணன் ஆகிய அமைச்சரின் பினாமிகளுக்கு மட்டுமே ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரது பொறுப்பில் இருக்கும் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை சார்ந்த ஒப்பந்தங்கள் அவரது சம்பந்தி உள்ளிட்ட உறவினர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கே அளிக்கப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களில் மட்டும் இந்த நிறுவனங்களுக்கு ரூ.4800 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு உயர்த்தப்பட்டதில் மட்டும் அரசுக்கு ரூ.1500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஊழல் தொடர்பாக கையூட்டு தடுப்புப்பிரிவு விசாரித்து வருகிறது.

மக்கள்நல அரசு என்பது ஒப்பந்தங்களை வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிப்பதாகவும், போட்டியை அதிகரித்து ஒப்பந்தச் செலவை குறைப்பதாகவும் இருக்க வேண்டும். மாறாக வெளிப்படைத் தன்மை இல்லாமல் தமக்கு வேண்டியவர்களுக்கு அதிக மதிப்புக்கு ஒப்பந்தப் புள்ளிகளை வழங்குவது மக்கள் நல அரசாக இருக்க முடியாது; கொள்ளையர் அரசாகவே இருக்கும். தமிழகத்தில் இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் தமிழகத்தில் நடப்பது இரண்டாவது வகை அரசாகவே தோன்றுகிறது.

தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் யாருக்கும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மாறாக அரசு கவிழ்வதற்கு முன்பாக மக்களின் வரிப்பணத்தை சுரண்டுவதையே முழுநேரத் தொழிலாளாகக் கொண்டுள்ளனர். ஒப்பந்தங்களை பினாமி பெயர்களில் எடுத்து ஊழல் செய்யும் அமைச்சர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரையும் தமிழக ஆளுனர் உடனடியாக பதவி நீக்க வேண்டும். அமைச்சர்களின் பினாமிகளுக்கு வழங்கப்பட்ட பணிகளின் தரம் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி இது குறித்த உண்மைகளை வெளிக் கொண்டு வருவதற்காக நடுவண் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!