CBI probe is not restricted to: the continuation of the post of Minister of stocking, shameful! PMK. Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சுகாதார அதிகாரி சிவக்குமார் என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் குட்கா ஊழல் நடந்து இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதை உச்சநீதிமன்றத்தின் இன்றையத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

குட்கா ஊழலை மூடி மறைப்பதற்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஏராளமான நடவடிக்கைகளை பினாமி அரசு மேற்கொண்டு வரும் போதிலும் அவற்றை நீதிமன்றங்கள் முறியடித்து வருகின்றன. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயரதிகாரிகள் சிலர் உட்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுக்கு குட்கா நிறுவனம் கோடிக்கணக்கில் கையூட்டை வாரி வழங்கியதற்கான ஆதாரங்கள் வருமானவரித்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்டு, தமிழக அரசிடமும், காவல்துறையிடமும் ஒப்படைக்கப்பட்டன. அவ்வளவுக்குப் பிறகும் கையூட்டு வாங்கியவர்கள் பட்டியலில் இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளை தவிர்த்து விட்டு, சாதாரண அதிகாரிகள் மீது மட்டும் தமிழக கையூட்டுத் தடுப்புப் பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. விஜயபாஸ்கர் உள்ளிட்டோரைக் காப்பாற்ற அரசு முயன்றதால் தான் இவ்வழக்கை உயர்நீதிமன்றம் சி.பி.ஐக்கு மாற்றியது. ஆனாலும் இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்க்க மாட்டோம் என்று வீர வசனம் பேசிய பினாமி ஆட்சியாளர்கள், சிவக்குமார் என்ற இளநிலை அதிகாரியை பினாமியாக மாற்றி அவர் பெயரில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததிலிருந்தே குட்கா ஊழல் வழக்கைக் கண்டு தமிழக ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதை உணர முடியும்.

குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதற்காக கூறியுள்ள காரணங்கள் முக்கியமானவை. குட்கா ஊழலில் தமிழக அமைச்சர் ஒருவருக்கும், காவல்துறை உயரதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிப்பது தான் முறையாக இருக்கும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இத்தகைய கருத்துக்குப் பிறகும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அட்டைப் பூச்சியைப் போல பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதும், அதை பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதித்துக் கொண்டிருப்பதும் வெட்கக்கேடானது ஆகும். இந்த அவலம் தொடரக்கூடாது.

குட்கா ஊழலில் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கும் நிலையில், அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்த வழக்கில் சி.பி.ஐ. அமைப்பு இனியும் தாமதிக்காமல் விசாரணையை தொடங்க வேண்டும். குட்கா நிறுவனங்களிடம் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் கையூட்டு பெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கும் நிலையில், அவரை கைது செய்து விசாரணை நடத்த மத்திய புலனாய்வுப் பிரிவு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!