Central and state governments should resolve the issue of military placement in Tiruchirappalli-Mannarpuram expansion work: Vaiko request

File Copy

மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை:

திருச்சி மாநகர மக்களின் பல வருடக் கனவாக இருந்து வரும் திருச்சி ரயில்வே ஜங்சன் மேம்பாலம் கட்டும் பணி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.81.4 கோடி திட்ட மதிப்பில் தொடங்கப்பட்டது.

இந்த மேம்பாலமானது திருச்சி – திண்டுக்கல் கருமண்டபம் சாலை, திருச்சி – மதுரை கிராப்பட்டி சாலை, திருச்சி – மன்னார்புரம் சாலை, ஜங்சன் மற்றும் மத்தியப் பேருந்து நிலையச் சாலைகள் என ஐந்து பிரதான சாலைகளை இணைக்கும் வகையில் திட்ட வரையறை செய்யப்பட்டது.

இதன்மூலம் மதுரையிலிருந்து திருச்சிக்கும், புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கும், திண்டுக்கல்லில் இருந்து திருச்சிக்கும், திருச்சி மாநகர மக்களுக்கும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் உடனடியாக திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் மற்றும் மத்தியப் பேருந்து நிலையத்திற்கும் செல்ல முடியும்.

இதில், பாலப் பணிகள் ஓரளவு முடிக்கப் பெற்று மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திண்டுக்கல் கருமண்டபம் சாலையை இணைக்கும் பாலமும், ஜங்சன் ரயில்வே சாலை மேம்பாலமும் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

அதன்பின்பு இப்போதைய முதல்வர் அவர்களால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை கிராப்பட்டி சாலை மற்றும் மத்தியப் பேருந்து நிலைய சாலையின் பாலப் பகுதிகள் திறந்து வைக்கப்பட்டது.

இதனிடையே மன்னார்புரம் சாலையை இணைக்கும் பாலப் பணிகள் மட்டும் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தப் பாலப் பணிகள் முழுமையடையாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு திருச்சி மாநகர மக்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

இப்பிரச்சனையை தீர்ப்பதற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முயன்று, ராணுவத்துக்குச் சொந்தமான 2 ஆயிரத்து 600 சதுர மீட்டர் அளவுக்கு இடம் வழங்கக் கேட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் ராணுவ அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டன.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் மாற்று நிலம் அடையாளம் காணப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டது. எனினும், சென்னையில் மையமான பகுதியில் மாற்று நிலம் வழங்கிட வேண்டும் எனக்கேட்டு ராணுவ அமைச்சகத்தின் அதிகாரிகள் பின்வாங்கியுள்ளனர்.

இதனால், கடந்த பதினெட்டு மாதங்களாக இப்பணிகள் தொடங்கப் பெறாமல் மன்னார்புரம் சாலையை இணைக்கும் பாலம் தொங்கிக் கொண்டிருக்கிறது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற ஏமாற்றத்துடன் திருச்சி மாநகர மக்கள் உள்ளனர்.

இந்தப் பிரச்சனையில் உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு ராணுவ இடம் தொடர்பாக மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் பேசி மன்னார்புரம் சாலையை இணைக்கும் மேம்பாலக் கட்டுமானப் பணிகளை உடனடியாகத் துவக்கிடக் கேட்டுக் கொள்கின்றேன்.

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கப் பெற்ற மேம்பாலப் பணிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக தடைபட்டுள்ளதற்கு ராணுவ அமைச்சகம் காரணமாக அமைந்துவிடக் கூடாது என்ற பொறுப்புணர்வுடன் மத்திய ராணுவ அமைச்சரும் இப்பிரச்சனையை அணுகவேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!